ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..!

0 1286

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனிடையே டெல்லியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய நேரடி முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறப்பட்டது. 2007 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், நிதி திரட்ட விதிமுறைகளை மீறி ஒப்புதல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக 2017 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து சிபிஐ தன்னை கைது செய்வதை தடுப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை ஏற்று 2 வழக்குகளிலும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியது. பின்னர் முன்ஜாமின் கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமின் விசாரணை மீண்டும் நீதிபதி சுனில் கவுர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்று ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். இது போன்ற வழக்கில் முன்ஜாமின் அளிப்பது சமூகத்திற்கு தவறான முன் உதாரணம் ஆகி விடும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். முன்ஜாமின் வழங்கிய காலகட்டத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ப.சிதம்பரம் சரியாக பதிலளிக்கவில்லை என்பதையும் நீதிபதி சுனில் கவுர் சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதி மறுத்து விட்டார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல், அபிஷேக்மனு சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார். புதன்கிழமை காலை அவரது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். ப.சிதம்பரம் அங்கு இல்லை என்பதால், சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே ஏர்செல் மற்றும் மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கிலும் ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments