மத்திய கைலாஷில் “எல்” வடிவ மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் - அமைச்சர் வேலுமணி

0 622

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் “எல்” வடிவ மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பாலத்தின் கட்டுமான பணிகள் துவங்கும் எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாகவும், இதனால் மக்கள் சாலையை கடக்க அதிகம் சிரமத்துக்குள்ளாவதாகவும் கூறினார். இதற்கு தீர்வு காணும் வகையில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, சென்னை மத்திய கைலாஷ் மற்றும் ராஜீவ் காந்தி சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் “எல்” வடிவ மேம்பாலம் அமைக்க மக்களின் கருத்து கேட்டறிந்து, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேம்பாலம் அமைக்கப்பட்டபின் போக்குவரத்து நெரிசல் குறையுமெனவும், அதன் பின்னர் நடை மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அமைச்சர் பதிலளித்தார். பின்னர் பேசிய மா.சுப்பிரமணியன், சைதை தொகுதியில் திமுக ஆட்சி காலங்களில் மட்டுமே மேம்பாலம் அமைக்கப்படுவதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, திமுக ஆட்சியைக் காட்டிலும், அதிமுக ஆட்சி காலங்களில் தான் அதிகமான மேம்பாலங்கள் கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதற்கு உதாரணமாக, 2006-11 திமுக ஆட்சி காலத்தில் வெறும் 58 மேம்பாலங்கள் தான் கட்டப்பட்டது என்றும், 2011-16 வரையிலான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 550 மேம்பாலங்களும், 2017 முதல் தற்போது வரையிலான எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 304 மேம்பாலங்கள் கட்டப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments