விபத்தை தவிர்க்க என்ன செய்யலாம் ? ஆபத்தான ஆம்னி பயணம்

0 1867

பொள்ளாச்சி அருகே வளைவில் அதிவேகமாக வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற சரக்கு வாகன ஓட்டுனரின் அவசர புத்தியால், ஆம்னி வேன் மீது மோதி 3 பேர் பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் மீது செலுத்தும் அதே கவனத்தை, சாலைவிதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடமும் காவல்துறையினர் காட்டுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உடுமலைப்பேட்டை சிவசக்தி காலனியில் இருந்து கோவைக்குச் சென்ற ஆம்னி கார் மீது, பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி சுங்கம் அருகே வளைவான பகுதியில் பெரியகுளம் நோக்கிச்சென்ற சரக்கு வாகனம் அதிவேகத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக பலியாயினர்..!

ஆம்னி வேன் ஓட்டுனர் வேலுச்சாமி, சம்பத்குமார்,பேபிகமலம், ஆகியோர் பலியான நிலையில், சரக்கு வாகன ஓட்டுனர் ஆனந்த், காரில் வந்த ஜோதிமணி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் காவல்துறையினர் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

விதியை மீறி வளைவில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல வேண்டும் என்ற சரக்கு வாகன ஓட்டுனரின் அவசர புத்தியால் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் சாலையை விட்டு வெளியே சென்று விட்டது. ஆம்னி வேன் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கி திசை மாறி நின்றது.  இதுபோன்ற வளைவுகளில் முறையான அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும், வாகன ஓட்டிகளும் வளைவுகளில் அதிவேகத்தில் திரும்புவதையும் முன்னால் செல்கின்ற வாகனங்களை முந்திச் செல்ல முயல்வதையும் தவிர்க்க வேண்டும்.

தலைக்கு ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது என்று இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் காவல்துறையினர், ஆம்னி வேன் போன்ற வாகனங்களை எப்படி அனுமதிக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இல்லாத இந்த வாகனங்கள், விபத்தில் சிக்கினால் உயிர்ப் பலி நிச்சயம் என்ற நிலையில், இதனை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதாகவே கருதப்படுகிறது.

கிராமப்புறங்களில் ஆம்னி வேன்களின் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில், இதுபோன்ற பாதுகாப்பற்ற வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துமாறு அறிவுறுத்துவது அவசியமாகிறது. சரக்கு வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்த வேண்டும் என்ற விதி முறையாக கடைபிடிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு வேகத்தில் வாகனத்தை வளைவில் இயக்கி இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்கும் போது விரைவாக செல்ல வேண்டும் என்று எண்ணாமல் பயணிக்க பாதுகாப்பாக வேண்டும் என்று சிந்தித்தாலே பாதி விபத்துக்கள் குறைந்து விடும். அதே நேரத்தில் பந்தய சாலை என நினைத்து வாகனத்தை அதிவேகத்தில் இயக்கி விபத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க, போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments