செப்டிக் டேங்கிற்குள் மண்டை ஓடு, எலும்புக்கூடு.. காட்டிக் கொடுத்த சிகப்பு கயிறு..! 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய மனைவி

0 5317

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொன்று செப்டிக் டேங்கிற்குள் சடலத்தை மறைத்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு கையில் கட்டியிருந்த சிகப்பு கயிறு மூலமாக துப்பு துலக்கி மனைவியை, போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவரான சரவணன், தனது இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு சென்னையில் வசித்து வருகிறார். வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் சுமார் 10 வருடங்களாக சுத்தம் செய்யப்படாததால் அதனை சுத்தம் செய்ய ஆட்களை நியமித்திருந்தார் சரவணன்.

கழிவுகளை ஓஸ் போட்டு முழுமையாக அகற்றி விட்டு, குழிக்குள் சாணம் இடும்
பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குழிக்குள் மண்டை ஓடு, எலும்புக்கூடு உள்ளிட்டவை கிடப்பதை பார்த்து தேவகோட்டை நகர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

செப்டிக் டேங்கிற்குள் கிடந்த மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் கைலி, சட்டை, கண்ணாடி துண்டு போன்றவற்றை கைப்பற்றிய போலீஸார், கடந்த 10 ஆண்டுகளாக அந்த வீட்டில் யாரெல்லாம் வசித்தார்கள் என்ற கோணத்தில் விசாரணையை துவங்கினர்.

அதில், 8 ஆண்டுகளுக்கு முன்பு விளங்காட்டூரைச் சேர்ந்த பாண்டியன்-சுகந்தி
தம்பதியர் வசித்து வந்ததும், இதில், பாண்டியன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

எனவே, புகாரளித்த பாண்டியனின் தந்தை சண்முகத்தை அழைத்து வந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை போலீஸார் காண்பித்தனர். அங்கிருந்த சிகப்பு கயிறைக் காட்டி, அதனை பாண்டியன் எப்போதும் கையில் கட்டியிருப்பார் என அவர் தெரிவித்தார். இதனையடுத்து, தேவகோட்டையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்த சுகந்தியிடம் விசாரணை நடத்தினர் போலீஸார்.

ஆம்னி பேருந்து ஓட்டுநரான பாண்டியன், மதுகுடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிவித்தார் சுகந்தி. கடந்த 2014-ம் ஆண்டு வழக்கம் போல மதுபோதையில் வந்த பாண்டியன், ஏன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறாய் எனக் கேட்டு தகராறு செய்ததோடு, சுகந்தியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, பாண்டியனை கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு அவர் அதே இடத்தில் உயிரிழந்ததாக தெரிவித்தார் சுகந்தி.

வீட்டின் முன்பகுதியிலேயே செப்டிக் டேங்க் இருந்ததால் அதன் மூடியை திறந்து உடலை உள்ளே தள்ளி விட்டு மூடியதாகவும், 6 மாதத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாண்டியன் காணாமல் போனது குறித்து அப்போது அளிக்கப்பட்ட புகாரில், போலீஸார் தன்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கணவர் வேறொரு பெண்ணுடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வருவதாகவும், அவ்வப்போது பணம் மட்டும் அனுப்பி வருவதாகவும் கூறினேன். அதனை உண்மையென நம்பி போலீஸாரும் தொடர்ந்து விசாரணை நடத்தாமல் விட்டு விட்டனர் எனத் தெரிவித்தார் சுகந்தி.

சுமார் 9 ஆண்டுகளாக தேடி வந்த மகன் செப்டிக் டேங்க்கிற்குள் இருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டது பெற்றவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையை சுகந்தி மட்டுமே தனியாக செய்திருக்க முடியாது என தெரிவித்த உறவினர்கள், போலீஸார் உரிய விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

சுகந்தியை கைது செய்த போலீஸார், இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

போதையால் மனைவிக்கு தினமும் துன்பம் கொடுத்து வந்தால் என்ன மாதிரியான சம்பவம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாக மாறி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments