மதுபோதையில் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த நபரை நடத்துனர் இறக்கிவிட்டதாக கருதி ஆத்திரம்.. நடத்துனரையும், ஓட்டுனரையும் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல்

தூத்துக்குடியிலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்தில் மதுபோதையில் பயணித்த இளைஞரை, நடத்துனர் பாதி வழியில் இறக்கிவிட்டதாக கருதி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இரவு 10 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தை நிறுத்திய ஒரு கும்பல், இளைஞர் ஒருவரை பேருந்தில் ஏற்றி அனுப்பியது.
மதுபோதையில் இருந்த அந்த இளைஞர், படிக்கட்டில் பயணம் செய்ததால், இருக்கையில் அமர நடத்துனர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டை சுங்கச்சாவடி அருகே நின்ற பேருந்திலிருந்து, அந்த போதை இளைஞர் இறங்கியுள்ளார்.
மேலும் தன்னை பேருந்தில் ஏற்றிவிட்ட கும்பலுக்கு ஃபோன் செய்துள்ளார். இதையடுத்து பேருந்து புதுக்கோட்டை சத்யா உணவகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர், பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்தனர்.
பேருந்திலிருந்து அண்ணனை எப்படி இறக்கிவிடலாம் எனக் கூறி நடத்துனரையும், ஓட்டுனரையும் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தனர்.
நடத்துனரும், ஓட்டுனரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments