ஹேப்பி ஸ்டீரிட் நடத்தி வழக்கு வாங்கிய ஏற்பாட்டாளர்கள்..!

0 2363

ஹேப்பி ஸ்டீர்ட் நிகழ்ச்சி முடிந்த பிறகு, மேடை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை நகர்த்தக் கூறிய போலீஸாருடன், தள்ளுமுள்ளுவில் சில இளைஞர்கள் ஈடுபடவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆடல் பாடலுடன் துவங்கிய ஹேப்பி ஸ்டீர்ட் என்ற நிகழ்ச்சி படிப்படியாக ஒவ்வொரு பெருநகரங்களிலும் நடத்தப்பட்டு சேலத்தில் ஹேப்பினிங் ஸ்டீர்ட் என்ற பெயரில் நடைபெற்றது.

சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக காலை 5 மணியிலிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் திரளாக வந்து குவியத் துவங்கினர் இளைஞர்கள். தாங்கள் வந்த வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசலால் திணறியது அஸ்தம்பட்டி.

டிஜே இசைக்கு ஏற்ப சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரையில் வீதியில் இறங்கி ஆட்டம் போட்டதுடன், சிலர் தங்களின் தனித்திறனையும் வெளிப்படுத்தினர்.

நூற்றுக்கணக்கானோர் திரண்டதாக கூறப்படும் நிலையில், ஏராளமான போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒருவழியாக, விழா முடிந்ததும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விழா மேடை அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை உடனே அங்கிருந்து எடுக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது.

அந்த காரில் வந்த இளைஞர்கள் சிலர் எங்களது கார்களை எப்படி எடுக்கச் சொல்லலாம் எனக் கேட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒருவரையொருவர் தள்ளி விட்டுக் கொண்டதாகவும்கூறப்படுகிறது.

காவல் ஆய்வாளர் பால்ராஜ் இளைஞர்களை சமாதானம் செய்த நிலையிலும், காரில் ஏறுவதும் பின்னர் இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக இருந்தனர் அந்த இளைஞர்கள். இந்த வாக்குவாதத்தால் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போலீஸார் திணறினர்.

ஒரு வழியாக சமாதானமாகி அந்த காரை நகர்த்திய பிறகு, விழா மேடை அகற்றப்பட்டது. அதன் பின்னரே போக்குவரத்து சற்று சீரானது.

இதனையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஒன்று கூட வைத்தல், சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல், மின்சாதன பொருட்களை பயன்படுத்தி அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் அஸ்தம்பட்டி போலீஸார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments