பென்சில் மூலம் ஆவணங்களில் குறித்து வைத்திருப்பது ஏன்..? செந்தில் பாலாஜியிடம் கேமரா முன் சரமாரி கேள்விக் கணைகள்!

0 49537

செந்தில் பாலாஜிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ள அமலாக்கத்துறை, அவரிடம் நடத்தி வரும் பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை முழுவதையும் வீடியோவாக பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சாஸ்திரி பவனின் 3-வது தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் 7-ஆம் தேதி இரவிலேயே செந்தில் பாலாஜியிடம் ஆரம்பித்துவிட்டது விசாரணை.

பரமத்தி வேலூரில் கைப்பற்றப்பட்ட 60 நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் பற்றி முதலில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, அதன் பின் போக்குவரத்து துறை பணி நியமன மோசடி குறித்து கேள்வி எழுப்பி வருவதாக தெரிகிறது.

குறிப்பாக, போக்குவரத்துத் துறைக்குச் சம்பந்தம் இல்லாத உதவியாளர் சண்முகம், சகோதார் அசோக் குமார் மற்றும் கார்த்திக்கேயன் மூலம், ஆட்கள் தேர்வு நடந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அமலாக்கத்துறையினர், பணி நியமன பட்டியலைக் காட்டி நேர்முக தேர்வு குறித்த விவரங்கள் பென்சில் மூலம் குறித்து வைக்கப்பட்டது ஏன்? என்றும் வினவியுள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத அதிகாரியால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது ஏன் என்றும், விதிகளை பின்பற்றாமலும் உரிய அனுமதி இல்லாமலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது ஏன் எனவும் செந்தில் பாலாஜியிடம் கேட்டுள்ளனர்.

முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில், செந்தில் பாலாஜி கணக்கில் ஒரு கோடியே 34 லட்ச ரூபாயும் அவரது மனைவி மேகலா கணக்கில் 29 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதற்கான ஆவணங்கள் அமலாக்கத்துறையினரிடம் உள்ளதாக தெரிகிறது.

பணம் கொடுத்து வேலை கிடைக்காதவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகத்திடம் பணம் கொடுத்ததாக கூறி இருந்தனர்.

அந்த பணம்தான், வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டதா, அல்லது வேறு எங்கிருந்து வந்தது என்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்ததாக சொல்லப்படுகிறது.

அதே போன்று, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் செந்தில் பாலாஜிக்கும் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இடையில் தரகராக செயல்பட்டதாக கூறியதாக தெரிகிறது. அது தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜியின் முன்வைத்து அவரது பதிலை அமலாக்கத்துறையினர் பெற்றுள்ளதாக தெரிகிறது.

செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் விசாரணையை வீடியோவில் முழுமையாக பதிவு செய்யும் அமலாக்கத்துறை, அந்தத் தகவல்களை தட்டச்சும் செய்து கொள்கின்றனர். பின்னர் வீடியோ மற்றும் ஆவணங்களை காட்டி உரிய படிவங்களில் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து பெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணைக்குப் பின் குளிர் சாதன வசதி கொண்ட அறையில் செந்தில் பாலாஜி உறங்குவதற்கு மெத்தை அளித்துள்ள அமலாக்கத் துறையினர், அவரது வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை வழங்கவும், காலையில் 3-வது தளத்தின் வராண்டாவிலேயே வாக்கிங் செல்லவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

தினமும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின் விசாரணையை துவங்கும் அமலாக்கத்துறையினர், காலை, மற்றும் மாலையில் செந்தில் பாலாஜி வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments