இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரை ஓட ஓட விரட்டி இரும்பு ராடால் தாக்கிய கும்பல்...!

சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியை ஓட ஓட விரட்டி இரும்பு ராடால் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளரான பெரியசாமி, எம்.சாண்ட் விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.
இன்று காலை இவர் லாரியில் லோடு ஏற்றிச் சென்ற போது, தாதகாப்பட்டியில் வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், பெரியசாமியை ஓட ஓட விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனைக்கு எதிராக தான் போராட்டங்கள் நடத்தியதால், அன்னதானப்பட்டியில் லாட்டரி சீட்டு விற்கும் கும்பல் தன்னை தாக்கியதாகவும், உயிருக்கு பயந்து அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றதால் தான் உயிர் தப்பியதாகவும் கூறி பெரியசாமி ரத்தக் காயங்களுடன் வீடியோ வெளியிட்டார்.
காயமடைந்த பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்யக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
Comments