மாமூல் கேட்டு ஓட்டலை அரிவாளால் அடித்து நொறுக்கி அட்டூழியம்... பதை பதைக்கும் காட்சிகள்...!

0 1772

மன்னார்குடியில் மாமூல் கேட்டு ரவுடி கும்பல் ஒன்று ஓட்டல் மற்றும் மளிகை கடையில் அரிவாள் வீசி அட்டகாசம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. 1000 ரூபாய் மாமூலுக்காக செய்த அட்டூழியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையில், வெங்கடேஷ் என்பவர், கடந்த 8 மாதங்களாக, சிங்கப்பூர் பரோட்டா கடை என்ற பெயரில், உணவகம் நடத்தி வந்தார்.

திங்கட்கிழமை இரவு அந்த உணவகத்திற்கு வந்த 3 பேர் கும்பல், ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது. அதற்கு அடிக்கடி மாமூல் கேட்டால் எப்படி கடையை நடத்துவது எனக்கூறி உணவக உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த 3 பேரும், கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடையை அரிவாளால் அடித்து நொறுக்கினர்.

ஒரு கட்டத்தில் அந்த நபர் சாம்பார் வாளியை அரிவாளால் வெட்டி தனது வீரத்தைக் காட்டினான்... அந்த நேரத்தில் உணவு வாங்க கடைக்கு வந்த பெரியவரை மற்றொருவன் அரிவாளால் வெட்டியதால் அவர் அலறிக்கொண்டே ஓடினார்.

ஹோட்டலில் இருந்த உணவுகள் மற்றும் உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் அனைத்தையும் கீழே இழுத்துப்போட்டும், தள்ளிவிட்டும் அரிவாளால் வெட்டியும் வீணாக்கிய அந்த கும்பல், அரிவாளை சுழற்றிக் கொண்டும், சாலையில் தேய்த்தபடியும் சாவகாசமாக சென்றனர்....

வ.உ.சி சாலையைச் சேர்ந்த விக்கி என்ற ராமச்சந்திரன், சேரன்குளத்தைச் சேர்ந்த பாஸ்கர், எடத்தெருவைச் சேர்ந்த பிரசாத் ஆகியோர் மாமூல் கேட்டு தனது ஓட்டலில் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய உணவக உரிமையாளர் வெஙக்டேஷ் , வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே சிரமமாக உள்ள இந்த காலக்கட்டத்தில், இவர்களின் மிரட்டலால், ஊழியர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்குச் புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

பரோட்டா கடை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேரையும் தேடிக் கண்டுபிடித்ததாகவும், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, 3 பேரும் தப்பிவிட்டதாகவும் மன்னார்குடி காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, உணவகத்திற்கு அருகில் உள்ள மளிகை கடை ஒன்றிலும், அந்த மூவர் கும்பல், மாமூல் கேட்டு மிரட்டியதோடு, விற்பனைக்காக வைத்திருந்த வெங்காயத்தை எடுத்து எறிந்து, கடை ஊழியர்களை தாக்கிய காட்சிகளும், அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மன்னார்குடியில், மாமூல் கேட்டு மிரட்டி வன்முறையில் ஈடுபடும் கும்பலை இரும்புக்கரம் கொண்டு போலீசார் ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments