தேனிலவோடு முடிந்த திருமண வாழ்க்கை... ஃபோட்டோ ஷுட்டில் பலியான டாக்டர் தம்பதி..!

0 3404
தேனிலவோடு முடிந்த திருமண வாழ்க்கை... ஃபோட்டோ ஷுட்டில் பலியான டாக்டர் தம்பதி..!

இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு தேனிலவிற்காகச் சென்று போட்டோ ஷூட் நடத்திய போது மோட்டார் போட் கவிழ்ந்ததில் திருமணமாகி ஒரே வாரமான சென்னையைச் சேர்ந்த டாக்டர் தம்பதியினர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

மணமாலை வாடவில்லை... மஞ்சள் தாலியில் ஈரம் இன்னும் காயவில்லை....தேனிலவிற்காக இந்தோனேஷியா சென்ற இடத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதி லோகேஸ்வரன்-விபூஷ்னியா இவர்கள் தான்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவரான லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு செல்ல முடிவெடுத்தனர். இயற்கை எழில் கொஞ்சும் பாலி தீவில் சுற்றுலா சென்றவர்கள், இந்த அழகிய சூழலில் போட்டோ ஷூட் நடத்தினால் எப்போதும் நினைவில் இருக்குமே என்றெண்ணி அதற்கான ஏற்பாட்டில் இறங்கினர். இருவரும் ஒரு மோட்டார் போட்டில் நின்றுக் கொண்டு போஸ் கொடுக்க, மற்றொரு படகில் கேமரா மேன்கள் நின்றுக் கொண்டு படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நிலை தடுமாறி லோகேஸ்வரனும் விபூஷ்னியாவும் படகில் இருந்து தவறி தண்ணீருக்குள் விழுந்து நீரில் தத்தளித்தனர். அவர்களை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் முயல்வதற்குள்ளாக அவர்கள் இருவரும் நீருக்குள் மூழ்கினர். தகவலறிந்த மீட்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு லோகேஸ்வரனை வெள்ளியன்று சடலமாக மீட்டனர். விபூஷ்னியாவின் சடலத்தை தொடர்ந்து தேடி வந்த நிலையில் சனிக்கிழமை அவரது சடலமும் மீட்கப்பட்டது.

இருவரது சடலங்களையும் இந்தியாவிற்கு எடுத்து வரும் பணியில் தூதரக அதிகாரிகள் உதவியுடன் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போட்டோ ஷூட் விபரீதத்தால் திருமணமான ஒருவாரத்திற்குள் மருத்துவ தம்பதியினர் மரணத்தை தழுவியது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments