புர்காவிற்குள் ஒளிந்த கொள்ளைக்காரிகளை சாப்ட்வேரால் மடக்கிய போலீஸ்..! போலீசாரின் ஸ்மார்ட் ஒர்க்

0 2512

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகை வாங்குவது போல நடித்து கவரிங் நகையை வைத்து விட்டு தங்க நகையை களவாடிச்சென்ற புர்கா அணிந்த கேடி லேடிகளை FRS தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போலீசார் சாமர்த்தியமாக கைது செய்தனர்..

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் பிரபல நகை கடை ஒன்றில் புர்கா அணிந்து கொண்டு நகை வாங்குவது போன்று உள்ளே புகுந்த இரண்டு பெண்கள் தங்க நகைகளை எடுத்து காண்பிக்க சொல்லி உள்ளனர்.

கடையின் ஊழியர்கள் தங்க நகைகளை காட்டிய போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றரை பவுன் கம்மலுக்கு பதிலாக கவரிங் நகையை வைத்து விட்டு நைசாக மின்னல் வேகத்தில் வெளியே தப்பி சென்று விட்டதாக கூறப்படுகின்றது

பின்னர் பொருட்களை கணக்கெடுத்த ஊழியர்கள், தங்க நகைகளுடன் போலியாக கவரிங் நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் அருள் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். நகை கடையில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தங்க நகைகளை புர்கா அணிந்த கேடி லேடிகள் நூதன முறையில் திருடிச்சென்றது தெரியவந்தது.

செல்போன் சிக்னல் அடிப்படையில் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் தனிப்படை போலீசார் அந்த இருவர் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் உள்ள சிசிடிவி காமிராவில் கண்கள் தெளிவாக தெரியும் அளவுக்கு படம் ஒன்று சிக்கியது.

அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் துப்பு துலக்கும் பணியில் இறங்கினர். போலீசாரின் குற்ற விசாரணைக்காக ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்ட frs என்று அழைக்கப்படும் ஃபேஸ் ரெகக்னைசன் சாப்ட்வேர் என்ற செயலியில் புர்காவில் கண்கள் மட்டும் தெளிவாக தெரிந்த புகைப்படத்தை பொறுத்தி பார்த்தனர், அடுத்த நொடியே சேலை கட்டிய இரு கொள்ளைக்காரிகளின் கடந்த கால கைவரிசை பட்டியல் புகைப்படத்துடன் வெளியானது

இந்த கொள்ளையில் ஈடுபட்டது மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த அக்காள் -தங்கையான கவிதா, ஷீலாதேவி என்பதை கண்டறிந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்

கடந்த காலங்களில் கூட்டத்தை பயன் படுத்தி இதே போல போலி நகைகளை வைத்து புதிய நகைகளை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. சேலை அணிந்து கொண்டு திருடச்சென்று சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர். சேலையில் சென்றதால் எளிதாக சிசிடிவி காட்சிகளை வைத்து தங்களை அடையாளம் கண்டு சென்னை, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி ஆகிய ஊர்களில் போலீசில் சிக்கிக் கொண்டதால், இந்த முறை புர்காவிற்குள் ஒளிந்து கொண்டு திருட்டில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பழைய திருட்டு வழக்குகளில் இருந்து அண்மையில் ஜாமினில் வெளியே வந்ததும், பழைய திருடி.... பொருளை எடுடி... என்று கைவரிசை காட்டியதால் போலீசில் சிக்கி மீண்டும் ஜெயிலில் கம்பி எண்ணி வருகின்றனர் இந்த திருட்டு சகோதரிகள்..!

FRS தொழில் நுட்பம் மூலம் போலீசார் பழைய குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments