காயத்துக்கு மருந்திட்ட மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற ஆசிரியர்..! அரசு மருத்துவமனையில் பயங்கரம்
வீட்டில் உள்ளவர்களை கொடூரமாக தாக்கியதாக கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்சென்ற இடத்தில் போதை ஆசிரியர் ஒருவர், அரசு பெண் மருத்துவரை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
பள்ளிப்பிள்ளைகளுக்கு நல்லதை போதிக்க வேண்டியதை மறந்து, போதைக்கு அடிமையானதால் கொடூரனாக மாறிய ஆசிரியர் சந்தீப் இவர் தான்..!
கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்தவர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்தீப். போதை வஸ்துக்களுக்கு அடிமையானதால் பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டாரிடம் வம்பிழுப்பது, கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. சம்பவத்தன்று குடும்பத்தினரை தாக்கும் போது காலில் லேசான காயம் அடைந்த சந்தீப்பை , புகாரின் பேரில் கைது செய்த போலீசார் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கு பணியில் இருந்த இளம் மருத்துவர் வந்தன தாஸ் என்பவர் , ஆசிரியர் சந்தீப்பின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்திட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அருகில் இருந்த கூர்மையான கத்திரிக்கோலை எடுத்து மருத்துவர் வந்தன தாஸை சரமாரியாக குத்த தொடங்கினார் ஆசிரியர் சந்தீப். இதில் கழுத்து , மார்பு என 6 இடங்களில் ஆழமான குத்து விழுந்ததால் மருத்துவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிச்சரிந்தார் , தடுக்க முயன்ற போலீசாருக்கும் குத்து விழுந்தது. இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த இடம் முழுவதும் ரத்த துளிகள் சிதறிக்கிடந்தது. மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து கொடூர ஆசிரியர் சந்திப்பை மடக்கிப்பிடித்த போலீசார் அவரது கைகளை கட்டிபோட்டனர். உயிருக்கு போராடிய மருத்துவர் வந்தன தாஸை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர் . அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்
அரசு மருத்துவமனைக்குள் வைத்து விசாரணை கைதியால் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு காவல்துறையினரின் மெத்தனமே காரணம் என குற்றஞ்சாட்டிய அரசு மருத்துவர் சங்கத்தினர் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்
இதன் காரணமாக சிகிச்சை பெற வந்த நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடூர குற்றவாளிகளை கையில் விலங்கிட்டு தக்க பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தால் இது போன்ற விபரீதம் அரங்கேறி இருக்காது என்று சுட்டிக்காட்டி உள்ள மருத்துவர்கள் தங்களது பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் கேரளா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த கொடூர கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளது . இதேபோன்று மனித உரிமை ஆணையமும் இச்சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளது. கேரளா மட்டுமல்ல அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது போன்ற குரூர மனம் படைத்த கைதிகளை சிகிச்சைக்காக அழைத்துச்செல்லும் போது போலீசார் உஷாராக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Comments