பூட்டிய வீட்டுக்குள் உருட்டிய கண்கள்... குடும்பமே சிறைவைப்பு..! 2 வருட கொரோனா ரூல்

0 3036

நாகர்கோவிலில் வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவுக்கு பயந்து மனைவி மற்றும் இரு மகள்களை கடந்த 2 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வீட்டுக்குள் பூட்டப்பட்டவர்களை மீட்கச்சென்று அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...  

தலையில் நீண்ட முடி... உருட்டிய கண்கள்... தன்னை பிதாவாக அரிவித்துக் கொண்டு மனைவி மகள்களை இரும்பு கேட்டு போட்டு வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்துள்ள இவர் தான் வழக்கறிஞர் பெர்ஷியஸ் அலெக்சாண்டர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசித்து வரும் பெர்ஷியஸ் அலெக்சாண்டர்- மாலதி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கொரோனாவிற்கு பயந்து கடந்த 2 ஆண்டுகள்ளுக்கும் மேலாக வீட்டுக்குள் மனைவி மற்றும் மகள்களை சிறை வைத்து அலெக்சாண்டர் கொடுமைப்படுத்துவதாக சமூக நலதுறை அதிகாரிக்கு புகார் வந்தது.

இதையடுத்து சமூக நலதுறை அதிகாரி சரோஜினி தலைமையில் சென்ற தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்பக்கமாக பூட்டிய முன்பக்க கேட்டை திறக்கச்சொல்லி அழைத்தும் வீட்டுக்குள் இருந்து யாரும் வரவில்லை, இதையடுத்து தீயணைப்புத்துறையினர் ஒருவர் பின் ஒருவராக வீட்டின் வெளி கேட்டை ஏறி குதித்தனர்.

இதனை மேல் மாடியில் நைட்டியுடன் நடமாடிய பெண் ஒருவர் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். அதனை கண்டு கொள்ளாத தீயணைப்பு வீரர்கள் போராடி மெயின் கேட்டை திறந்தனர்.

இதையடுத்து போலீஸ் படையுடன் சமூக நலத்துறை அதிகாரிகள் வளாகத்திற்குள் புகுந்தனர், இரும்புக்கேட்டால் பூட்டப்பட்ட வீட்டுக்குள் இருந்தபடியே கண்களை உருட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார் பெர்சியஸ் அலெக்ஸாண்டர் . வீட்டுக்குள் இருந்த அவரது மனைவி மாலதி மற்றும் பட்டப் படிப்பு முடித்த அவரது இரண்டு மகள்கள் வீட்டுக்குள் இருந்தனர்.

அவர்களை வெளியே வரச் சொன்னதும், என்ன எங்க எல்லோருக்கும் கொரோனா வந்துருக்குன்னு கொண்டுபோணும் அவ்வளவு தானே ? என்றார் மாலதி. அந்த பெண்கள் யார் என்று கேட்ட போது ? அது யார் என்று தெரியாது என்று சொன்ன அலெக்சாண்டர், நான் அவர்களுக்கு அப்பா இல்லை பிதா என்று புதுமையாக பதில் சொன்னார்.

அதிகாரிகளிடம் பேசிய அவரது மனைவி மாலதி தங்களுக்கு சொந்தமான கடையில் வாடகைக்கு இருந்து கொண்டு வாடகை தரமறுக்கும் நபரால் தங்களது உயிருக்கு ஆபத்திருப்பதாகவும் தங்களை திட்டமிட்டு மர்ம நபர்கள் கொல்ல மறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அலெக்சாண்டரோ தாங்கள் நேரடியாக ஏசு விடம் பேசுவதற்காக கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

கொரோனா விலகி, விடியல் பிறந்தது விட்டது வீட்டில் இருந்து வெளியே வாருங்கள்... என்று அழைத்தும் அவர்கள் வெளியே வர மறுத்ததோடு தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று வெளியே வர மறுத்துவிட்டதால் போலீசார் அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு சென்றனர்.

கிளைமேக்ஸில் அங்கு வந்த அவரது உறவினர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களிடம் எப்படி உள்ளே வரலாம் என்று கடுமையான வாக்குவாதம் செய்தார். 2 வருடமாக வீட்டுக்குள்ளேயே இருக்கும் இவர்களுக்கு முதலில் அலெக்சாண்டர் மட்டும் வெளியே வந்து உணவு பொருட்களை வாங்கிச் சென்ற நிலையில், அவர் தீவிர ஜெபத்தில் இறங்கியதால் , அமேசானில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதும் விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments