பொன்னியின் செல்வன் - 2 படம் பார்க்க சென்ற பெண் 4 வது மாடியில் இருந்து குதித்து பலி... தனக்குள் இருவராக வாழ்ந்ததால் விபரீதம்..!
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கிற்கு குடும்பத்துடன் பொன்னியின் செல்வன் - 2 படம் பார்க்க சென்ற பெண் தனது குழந்தைகளை திரையரங்கில் நிர்கதியாக விட்டு விட்டு 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விபரீதம் அரங்கேறி உள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி . 38 வயதான இவர் அமெரிக்காவில் தங்கி கோவில் ஒன்றின் சமையலராக பணி செய்து வருகிறார். அவரது 33 வயதான மனைவி ஐஸ்வர்யா, மகன் மற்றும் மகளுடன் இங்கு வசித்து வந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு விமான நிலைய வளாகத்தில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கிற்கு வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக் காட்சிக்கு பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்கச்சென்றார்.
திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருந்த போது தனது இரு குழந்தைகளையும் படம் பார்க்க வைத்து விட்டு இரவு 7:20 மணிக்கு ஐஸ்வர்யா மட்டும் கழிவறை செல்வதாக கூறி எழுந்து சென்றுள்ளார். வெளியே வந்த ஐஸ்வர்யா உள்நாட்டு முனைய நடைபாதை வழியாக பன்னாட்டு முனையம் அருகே உள்ள அடுக்கு மாடி கார் பார்க்கிங் பகுதிக்கு ஒடிச் சென்றதாகவும், 4வது மாடிக்குப் போன ஐஸ்வர்யாவை கண்டு அங்கிருந்த கார் டிரைவர்கள் சத்தம் போட்டு தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகின்றது. யாரும் எதிர்பார்காத நிலையில் ஜஸ்வர்யா 4வது மாடி தடுப்புச் சுவற்றில் தனது செல்போனை வைத்து விட்டு மேலிருந்து கீழே குதித்துள்ளார்.
கீழே விழுந்த வேகத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த ஐஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நான்காவது மாடியில் இருந்த அவரது செல்போனை கைப்பற்றிய காவல் துறையினர் அதில் இறுதியாக பேசப்பட்டிருந்த நபருக்கு தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, எதிர்முனையில் பேசிய உறவினரான ராஜா, ஐஸ்வர்யா தனது இரு குழந்தைகள் உடன் பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து திரையரங்கில் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மன அழுத்தத்தால் தனக்குள் இரண்டு பேராக வாழ்ந்ததால் ஐஸ்வர்யா எடுத்த விபரீத முடிவு பற்றி தெரியவந்தது.
கணவர் பாலாஜி கடந்த அக்டோபர் மாதம் வெளிநாடு சென்று விட்ட நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த ஜஸ்வர்யா அதிகமாக கோபப்படுவதும் இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் சென்ற பிறகு தன்னையே இரு வேறு நபர்களாக உணர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள கணவரிடம் தொலைபேசியில் பேசும்போது எல்லாம் கடுமையான எரிச்சலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கணவர் பாலாஜியின் ஏற்பட்டின் பேரில் , ஐஸ்வர்யாவுக்கு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மன நல மருத்துவர்கள், கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில் தான் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
லட்சங்களை சம்பாதிக்க கணவன் கடல் கடந்து சென்றுவிட... ஆறுதல் சொல்லவோ, அரவணைப்பிற்கோ ஆள் இன்றி மன அழுத்தத்துக்குள்ளான ஐஸ்வர்யா, இப்படி ஒரு விபரீத முடிவை தேடிக் கொண்டதற்கு, உறவுகளை பிரிந்து வாழும் தனிக்குடித்தன வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என்கின்றனர் மனோ தத்துவ நிபுணர்கள்.
Comments