மணல் கொள்ளையர்களை கட்டுக்குள் வைத்திருந்தால் போலீசுக்கு இந்த வேலை இல்லை.. விவசாயி செய்த தரமான சம்பவம்..!

0 2238

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து என்று  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விவசாயி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவலில் ஈடுபட்டு வருகின்றனர்....

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட முறப்பநாட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகரம் என்ற கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாலகிருஷ்ணனை மணல் கொள்ளையர்களிடம் இருந்து காப்பதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி தூப்பாக்கி தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

விவசாயத்துடன் ஆடு மாடுகள் வளர்ப்பு பணிகளையும் செய்து வரும் பாலகிருஷ்ணன் 1வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு அகரம் ஊரின் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியில் மணல் கொள்ளை நடப்பதாகவும், அதை ஒட்டியுள்ள சுடுகாட்டிலும் மண் தோண்டப்படுவதால் எலும்புகூடுகள் வெளியே சிதறி கிடப்பதாகவும் முறப்பநாடு காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்து உள்ளார்.

வழக்கம் போல போலீசார் நடவடிக்கை எடுக்காததால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து மணல் கொள்ளையர்களிடமிருந்து பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ந்தேதி பாலகிருஷ்ணனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென நீதிமன்றம் காவல்துறைக்கு பரிந்துரை செய்தது.

அன்று முதல் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக சுழற்சி முறையில் தினமும் ஒருவர், என இரு போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன், பாலகிருஷ்ணனுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றார். அந்த இரு காவலர்களும் இல்லை என்றால் மாற்று காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றார்

இரவு நேரங்களில் அந்த கிராமத்திலேயே தங்கி இருந்து பாலகிருஷ்ணனுக்கு பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் தோட்டத்திற்கு சென்று விவசாயம் செய்வது மற்றும் ஆடு மாடுகளை மேய்ப்பது போன்ற நேரங்களில் கூட பாலகிருஷ்ணனுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் அருகிலே நின்று கொண்டு இருக்கிறார்.

மணல் கொள்ளையர்களுடன் கூட்டு வைத்துக் கொண்ட முறப்ப நாடுபோலீசாரின் முறையற்ற நடவடிக்கையால், மிரட்டல் விடுத்தவர்களை அடக்க இயலாமல், கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக விவசாயிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments