பயணியின் மூக்கில் குத்தி நெஞ்சில் பூட்ஸ் காலால் கொடூரமாக மிதித்த எஸ்.ஐ.! அரசு பேருந்துக்கு வழிவிட சொன்னது குத்தமா?

0 3745

அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்புகள்  அமைத்திருப்பது ஏன்? என்று கேள்வி கேட்ட பயணி ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மூக்கில் குத்தி இழுத்துச்சென்று பூட்ஸ் காலால் நெஞ்சில் எட்டி உதைத்ததாக கூறப்படும் சம்பவம் நாகையில் அரங்கேறி உள்ளது.

தமிழக - புதுச்சேரி எல்லையான நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் திருமருகல் சாலையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள 4 சாலைகளில் 2 சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பேருந்து மற்றும் பெரு வாகனங்கள் வளைய முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தடுப்புகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் வந்த 2 அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹாரன் சத்தம் எழுப்பியும் அந்த தடுப்புகளை அகற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அவ்வழியே சென்ற உள்ளூர் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிதாக செல்ல வழிவகை செய்யக்கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் வெகுநேரம் சிரமபட்டதை அடுத்து வாக்குவாதத்திற்கு பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல், போலீசாருடன் வாக்குவாதம் செய்த நபரை கடுமையாக மூக்கில் ஓங்கி குத்தி, ஆபாசமாக திட்டிசட்டையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகின்றது.

அங்கிருந்தவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அவரை ஏன் அழைத்து செல்கிறீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்

ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டம் நடத்திய நபரை கடுமையாக தாக்கி, இழுத்துச்சென்று காவல் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைத்தார்

உடன் சென்ற போலீஸ்காரரும் அவரை கடுமையாக தாக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்

போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்ட நபர் ஆரோக்கிய தாஸ் என்பதும் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

அரசு பேருந்து எளிமையாக செல்லும் வகையில் காவல் தடுப்புகளை அகற்ற கூறியதை குற்றம் என்று ஆரோக்கியதாஸை, காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பூட்ஸ் காலால் உதைத்து, தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பழனிவேலை ஆயுத படைக்கு மாற்றி, நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்திரவிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments