வழிவிட மறுத்ததால் மோதல்.. அரசு பேருந்து ஓட்டுநரின் காதை கிழித்த கார் ஓட்டுநர்..!
சென்னையில் சாலையில் வழிவிடுவது தொடர்பாக கார் ஓட்டுநருக்கும் அரசு பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் தாக்கிக் கொண்டனர். பேருந்து ஓட்டுநரின் கன்னம் வீங்கி காதில் ரத்தம் வடிந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தை கடந்துச் செல்ல வேண்டி சசிக்குமார் தொடர்ந்து ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது.
பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்ததால் ஓட்டுநர் பேருந்தை நகற்ற முடியாமல் போன நிலையில், வலதுபக்கம் இருந்த சிறிய இடைவெளியில் காரை நுழைத்து முந்திச் செல்ல முயன்றதாகவும், இதனால் கடுப்பான பேருந்து ஓட்டுநர் பேருந்தை நகர்த்தி காரை அணைப்பது போல் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சசிக்குமார், பேருந்தை வழிமறித்து காரை நிறுத்தி இறங்கி ஓட்டுநர் அருகிலுள்ள கதவின் கைப்பிடியை உடைத்து, பேருந்து ஓட்டுநர் அருணின் கன்னத்தில் ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஓட்டுநரின் கன்னம் வீங்கி, காதிலிருந்து ரத்தம் வழிய, அவரது கழுத்தில் இருந்த செயினும் அறுந்து விழுந்துள்ளது.
அத்துடன் விடாத சசிக்குமார், பேருந்துக்குள்ளும் சென்று அவரை தாக்க முயன்றுள்ளார். அப்போது ஓட்டுநரும் நடத்துநரும் ஒன்று சேர்ந்து சசிக்குமாரை சரமாரியாகத் தாக்கினர் என்றும் சொல்லப்படுகிறது.
பேருந்து முழுவதும் களேபரமாக மாற, பயணிகள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார், முதலில் போக்குவரத்தை சீர் செய்துவிட்டு இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுவிட்டு கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். தனது மருத்துவ செலவுக்கு 15 ஆயிரம் ரூபாய் தரச் சொல்லுங்கள் என பேருந்து ஓட்டுநர் இறங்கி வந்த நிலையில், காரில் வந்த நபர் மறுத்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பிலும் பேசியும் சாமதானம் ஆகததால், வேறு வழியின்றி இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
Comments