தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, முதுகலை பட்டதாரிப் பெண் எடுத்த விபரீத முடிவு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகி வந்த பெண் ஒருவர் குடும்பத் தகராறில் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோழிநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் - தெய்வா தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். முதுகலை பட்டப்படிப்பு முடித்த தெய்வா, துணை ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
திருப்பூரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்தவாறு மனைவியை படிக்கவைத்துள்ளார் குணசேகரன். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த குணசேகரன் வெள்ளிக்கிழமை இரவு மனைவியுடன் ஏற்பட்ட சிறு மனக்கசப்பில் திருப்பூர் கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் தெய்வா வீட்டின் கதவைத் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி பார்த்துள்ளனர்.
அங்கு வாயில் நுரை தள்ளியவாறு 2 குழந்தைகளின் சடலங்களும், தூக்கில் தொங்கிய நிலையில் தெய்வாவின் சடலமும் கிடந்துள்ளன. ஏற்கனவே இரண்டு முறை எழுதிய குடிமைப் பணி தேர்வில் தெய்வா தோல்வியுற்றதாகவும் தனது மகனின் வருமானம் மருமகளின் படிப்புக்கே செலவாகிறது என தெய்வாவின் மாமனார் அடிக்கடி சண்டையிட்டதாகவும் கூறப்படும் நிலையில், தெய்வா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments