சொத்தை எழுதிக்கொடு... இல்லன்னா மொத்தமா மூடிடு... குழிக்குள் இறங்கி ஒரு போராட்டம்..!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தந்தையின் சொத்தை தன் பெயருக்கு எழுதிக் கேட்டு 3 அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் இறங்கி பாதி உடலை புதைத்துக் கொண்டு நூதன போராட்டம் நடத்திய மகனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டியை அடுத்த அடைக்கம்பட்டியைச் சேர்ந்த காஜாமைதீனுக்கு முகம்மது சுல்தான், முகம்மது சுனில், என இரண்டு மகன்கள். ஆண்டிப்பட்டி - வருஷநாடு நெடுஞ்சாலை ஓரமாக காஜாமைதீனுக்குச் சொந்தமான 40 செண்ட் நிலம் உள்ளது.
காலை அங்கு வந்த காஜாமைதீனின் மூத்த மகன் முகம்மது சுல்தான், மண்வெட்டி கொண்டு பள்ளம் தோண்டத் தொடங்கியுள்ளார். சாலையில் சென்றவர்கள் ஏதோ மரக்கன்று நடப் போகிறார் என்று நினைத்து கடந்து போக, சுமார் 3 அடி அகலம், 3 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டிய சுல்தான், திடீரென உள்ளே இறங்கி சம்மணம் போட்டு அமர்ந்து பாதி உடல் புதையும் வரை மண்ணைக் கொண்டு மூடினார்.
கொளுத்தும் வெயிலில் அவர் என்ன செய்கிறார் என்று புரியாமல் விழித்தவர்களைப் பார்த்து, “இந்த நிலம் தனக்கு எழுதித் தரப்பட வேண்டிய நிலம் என்றும் ஆனால் தனது தந்தை தம்பி முகம்மது சுனிலுக்கு எழுதித் தர திட்டமிடுகிறார் என்றும் கூறியுள்ளார். “சரி அதுக்கு குழிக்குள்ள இறங்கி என்னயா பண்ற?” என்று கேட்டவர்களிடம், சொத்தை எழுதித் தந்தால்தான் வெளியே வருவேன் எனவும் கூறியுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், சுல்தானிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், எழுந்து வரவே முடியாது என அவர்களிடமும் அடம் பிடித்தார்.
காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் போலீசார் கொடுத்த தண்ணீரையும் குடிக்காமல், சுட்டெரிக்கும் வெயிலில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் மயக்க நிலைக்குச் செல்லத் துவங்கினார். இதனையடுத்து, அங்கிருந்தவர்களின் உதவியுடன் போலீசார் முகம்மது சுல்தானை குழிக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முகம்மது சுல்தானுக்கு குடிப்பழக்கமும் சூதாடும் பழக்கமும் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கனவே அவர் பெயருக்கு எழுதி வைத்த சொத்துகளை விற்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. பொறுப்பில்லாமல் சுற்றுவதால் அவருக்கு நிலத்தை எழுதி வைக்க காஜாமைதீன் விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
Comments