எனக்கு ரூ 10 லட்சம்... உனக்கு ரூ 2 லட்சம்.. இப்போதைக்கு ரூ 8000..! சாட்சியை கலைக்கும் கூலிப்படை

0 2378

சென்னையில் கே.டி.எம் பைக் வாங்குவதற்காக கூலிப்படையில் இணைந்து கையில் கத்தி எடுத்த இரு இளைஞர்கள் முதல் தாக்குதல் சம்பவத்திலேயே போலீசில் வசமாக சிக்கி உள்ளனர். கொலை முயற்சி வழக்கில் சாட்சி சொல்லாமல் இருக்க தாக்குதலில் இறங்கிய தூத்துக்குடி கூலிப்படையை தட்டித்தூக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் பொன்னிலா. இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் சிமெண்ட் கடையை வைத்து நடத்தி வருகிறார். திங்கட்கிழமை வழக்கம் போல பொன்னிலாவின் மகன் ராஜதேவ் நாத் கடையில் இருந்த போது, முககவசம் அணிந்து கடைக்கு வந்த இரண்டு வாலிபர்கள் செல்போனில் பேசியபடியே சிமெண்ட் விலை குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் திடீரென அவர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த சுத்தியல் மற்றும் கோடாரி ஆகிய ஆயுதங்களை கொண்டு ராஜதேவ் நாத்தை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

அந்த இருவரிடம் இருந்து வெளிப்பட்ட கஞ்சா நாற்றத்தால் முன்னதாகவே சுதாரித்து கொண்ட ராஜதேவ்நாத் தான் அமர்ந்திருந்த இருக்கையை தூக்கி மறித்து அவர்களில் ஒருவனை கீழே தள்ளிவிட்டு கடைக்குள் புகுந்து நூலிழையில் உயிர் பிழைத்தார்.

தாக்குதல் திட்டத்துடன் வந்த இருவரும் தப்பிச்சென்றனர். சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொலை செய்வதற்காக வந்த நபர்கள் விட்டுச்சென்ற செல்போனை கைப்பற்றி விசாரித்தனர். இதில் செல்போன் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. தனிப்படை போலீசார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முதலில் செந்தில், கோகுல் ஆகிய இருவரையும் அவர்களை அனுப்பி வைத்த விக்னேஷ் என்பவரையும் தட்டித்தூக்கினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, அயனாவரத்தில் வசித்து வரும் ஜெய்சிங்கிற்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி தந்தை ஜெய்சிங் மற்றும் சகோதரி சங்கீதா ஆகிய இருவரையும் கத்தியால் வெட்டி தாக்கியதாக அவரது மகன் ஹரிநாத் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹரிநாத் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தங்கி உள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை அல்லிக்குளம் மகிளா நீதிமன்றத்தில் வர இருந்ததால், ஹரி நாத்திற்கு எதிராக அவரது உறவினர் பொன்னிலா என்பவர் சாட்சியளிக்க இருந்தார். சாட்சியளிக்க விடாமல் அச்சுறுத்தி தடுப்பதற்காக தூத்துக்குடியில் இருந்த ஹரிநாத் கூலிப்படையை ஏவி உறவினர் பொன்னிலாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஹரிநாத்திடம் 10 லட்சம் ரூபாய் பேரம் பேசிய கூலிப்படை தலைவன் விக்னேஷ், 2 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி செந்தில் , கோகுல் ஆகியோரிடம் கூறி உள்ளான். கஞ்சா போதைக்கு அடிமையான இவர்கள், கே.டி.எம் மற்றும் ஆர்.ஒன்.பைவ் போன்ற இரு சக்கர வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கூலிப்படையாக செல்ல சம்மதித்துள்ளனர்.

கடையில் பொன்னிலாவுக்கு பதில் அவரது மகன் இருந்ததால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. செந்தில், கோகுல் ஆகிய இருவருக்கும் வேறு வழக்குகள் இல்லாததும், கொலை செய்தவுடன் முன்ஜாமீன் எடுத்து விடுவதாக கூறியதை நம்பி முன்பணமாக 8000 ரூபாய் மட்டுமே விக்னேஷிடம் பெற்றுகொண்டு இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹரி நாத், கூலிப்படை தலைவன் விக்னேஷ், செந்தில், கோகுல்ஆகிய நான்கு பேரை அயனாவரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments