ஐந்தறிவு ஜீவனின் பழி வாங்கும் பாசப் போராட்டம்.. சாலையில் கவனமாகச் செல்வோம்..!
இணையையும், குட்டியையும் சாலை விபத்தில் பறிகொடுத்த குரங்கு தனது ஆற்றாமையை அவ்வழியாகச் செல்லும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது வெளிப்படுத்தும் சோகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது..
செங்கல்பட்டு மாவட்டம் பூத்தூர் கிராமம் வழியாகச் செல்லும் மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர்களை துரத்திச் சென்று தாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குரங்கு ஏன் தேவையில்லாமல் இப்படி நடந்துக் கொள்கிறது என விசாரித்த போது மனதை நெகிழ வைத்த ஒரு சோகம் அதன் பின்னணியில் இருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது குட்டி மற்றும் இணையுடன் அப்பகுதிக்கு வந்துள்ளது ஆண் குரங்கு. சாலையை கடக்க முயன்ற பெண் குரங்கு காரில் அடிப்பட்டும், குட்டியோ இருசக்கர வாகனத்தில் சிக்கியும் இறந்துள்ளன. இதனை தனது கண்ணால் கண்ட ஆண் குரங்கு, அது முதலே கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
இதுவரையில் சுமார் 15 பேரை குரங்கு கடித்துள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோரை குரங்கு துரத்தும் போது அவர்கள் பயத்தில் விபத்தில் சிக்கும் ஆபத்து அதிகமாக உள்ளதெனவும் தெரிவித்தனர். எனவே, குரங்கை பிடிக்க வேண்டுமென வனத்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அப்பகுதி மக்கள் கூறினர்.
உறவுகளை கண்முன்னே இழந்ததால் மனரீதியாக பாதிப்பை சந்தித்துள்ள ஐந்தறிவு ஜீவன் மீதும் கருணை கொண்டு தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments