பாட்டி வீட்டில் முதலிரவு.. மகனை வெட்டி சாய்த்த தந்தையின் வெறிச்செயல்..! திருப்பூர் காதலுக்கு திகில் கிளைமேக்ஸ்..!

0 3735

திருப்பூரில் காதல் திருமணம் செய்து கொண்டு காதலியுடன் பாட்டி வீட்டில் தஞ்சம் அடைந்த இளைஞரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததாக தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். வெட்டுக் காயங்களுடன் தப்பி ஓடிய காதலியின் வீடியோ வெளியாகி உள்ளது..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி.., இவரது மகன் சுபாஷ்... இவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

பணிபுரியும் இடத்தில் அரியலூரை சேர்ந்த அனுஷியா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. அந்தப் பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

10 நாட்களுக்கு முன்பு அனுஷாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த விவரம் தெரியவந்ததும் சுபாஷை, அவரது தந்தை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சொல்லப்படுகின்றது.

இதனால் எங்கு போவது என்று தெரியாமல் ஊர் ஊராக சுற்றிய காதல் திருமண ஜோடி, வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த ஊரான ஊத்தங்கரை அருணபதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு புறப்பட்டு வந்து உள்ளனர்.

காதல் திருமணம் செய்த தனது பேரனை , மகன் புறக்கணித்தாலும் பாட்டி கண்ணம்மாள் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.
அன்று இரவு புதுமண தம்பதிக்கு முதலிரவுக்காண ஏற்பாடு செய்து விட்டு கண்ணம்மாள் வீட்டுக்கு வெளியில் படுத்திருந்துள்ளார்.

நள்ளிரவில் கையில் கொடுவாளுடன் வந்த தண்டபாணி, தன்னை மதிக்காமல் காதல் திருமணம் செய்த மகனை வீடு புகுந்து வெட்டிச்சாய்த்துள்ளார். தடுக்க வந்த தாய் கண்ணம்மாளையும் வெட்டிக் கொன்றார் . ஒரே வெட்டில் மயங்கிச்சரிந்த மருமகள் அனுஷியா இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து சத்தமிட்டபடியே சென்றுள்ளார்.

இதற்க்கிடையே ரத்த வெள்ளத்தில் கிடந்த அனுஷியா மயக்கம் தெளிந்து எழுந்து தனது செல்போனை எடுத்துக் கொண்டு பாதி உடையுடன் தப்பிச்சென்று வயல் வெளி களத்தில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகைக்குள் மறைந்திருந்து அதிகாலையில் அந்த வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டார்.

நடக்க இயலாமல் படுத்திருந்த அந்தப்பெண் யாராவது தன் மீது வேட்டியை எடுத்து வந்து போர்த்துமாறு கூறினார். அதற்கு முன்பாக விவசாயி ஒருவர் தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து அந்த பெண்ணின் உடலை மறைத்தார்..

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அனுஷியாவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்..

சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிபதி அமர்ஆனந்த் உயிருக்குப் போராடும் நிலையில் தீவிர சிகிச்சையில் உள்ள அனுஷியாவிடம், மரண வாக்குமூலத்தை பெற்றுச்சென்றார்..

சாதி கடந்து மலர்ந்த காதலை ஏற்க மனமில்லாமல் அரக்கத்தனமாக நடந்து கொண்ட தண்டபாணியை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments