ஒத்த சாவி தான் அத்தனை ஹீரோ பைக்கிற்கும் வில்லன்..! சங்கிலி பூட்டு தான் இனி பாதுகாப்பு

0 4698

காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் வாரச்சந்தைக்கு வரும் 45 இருசக்கர வாகனங்களை திருடிய களவாணியை போலீசார் கைது செய்தனர். ஒற்றை சாவியை கொண்டு ஹீரோ பைக்குகளுக்கு வில்லனான கண்ணன் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

காரைக்குடியிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களான புதுவயல் ,அரியகுடி,கண்டனூர்,போன்ற பகுதிகளிலும் வார சந்தைகள் நடைபெறும் நாட்களை குறிவைத்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக பைக்கை பறி கொடுத்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காரைக்குடி ASP ஸ்டாலின் தலைமையிலான குற்றப்பிரிவு தனிபடை காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்களத்தை சேர்ந்த பைக் களவாணி கண்ணனை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகளான கணேசன், விஜய் ,மாரிமுத்து, சுந்தர் ,ஆகியோரையும் தட்டித்தூக்கிய போலீசார், திருடி விற்கப்பட்ட 45 இருசக்கர வாகனங்களையும் அடுத்த 20மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து அதிரடியாக மீட்டனர்.

குறைந்த விலைக்கு வண்டியை வாங்கியவர்கள் வழக்கிற்கு பயந்து வண்டிகளை எடுத்துட்டு போகச் சொன்னதாக கூறப்படுகின்றது.

இந்த களவாணி கண்ணன் கும்பல், வாரச்சந்தையில் இருந்து திருடப்பட்ட பைக்குகளை 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்ற நிலையில் , மீட்கப்பட்ட வாகனத்தின் மொத்த மதிப்பு 12 லட்சம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் தான் பிரத்யேகமாக தயார் செய்து வைத்துள்ள ஒற்றை சாவியை பயன்படுத்தி ஹீரோ பைக்குகளை எளிதாக திறந்து களவாடிச்சென்றதாக கண்ணன் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து அவரது கையில் அந்த ஒற்றை சாவியை கொடுத்து எப்படி திருடினாய் செய்து காட்டு ? என்றதும், எதோ புதிய கண்டுபிடிப்பை செய்து காட்டுவது போல ஒவ்வொரு வண்டியாக ஸ்டார்ட் செய்து காண்பித்தார் கண்ணன்.

களவாணியின் கைவரிசையை கண்டு வியந்து போனார் ஏ.எஸ்.பி ஸ்டாலின். இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திச்செல்லும் போது கூடுதலாக சங்கிலிப் பூட்டுக்களை பயன் படுத்துமாறும், குறைந்த விலைக்கு யாராவது பைக் தருவதாக கூறினால் வாங்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments