வறண்டு போன பாலாறு.. திரண்டு ஓடிய தண்ணீர் எங்கே?
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், செங்கல்பட்டு வழியே செல்லும் பாலாறு முற்றாக வறண்டு மணல் காடாகக் காட்சியளிக்கிறது. சில மாதங்களுக்கு முன் இரு கரைகளையும் அணைத்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய ஆறுதானா இது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் பார்க்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் இப்படி இருகரைகளையும் தொட்டபடி, பேரிரைச்சலுடன் ஓடிய இதே பாலாறுதான், தற்போது முற்றாக வறண்டு, வெறும் சுடு மணலாகக் காட்சியளிக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமாண்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மெய்யூர், திம்மாவரம்,ஆத்தூர், ஒரக்காட்பேட்டை,காவூர் சித்தனக்காவூர், சீத்தனாஞ்சேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயிகள் பாலாற்றை நம்பி விவசாயம் செய்யக்கூடியவர்கள்.
மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடக்கூடிய இந்த பாலாற்றில் கோடைக் காலங்களில் ஓரளவுக்காவது தண்ணீர் தேங்கி நிற்கும் என்று கூறும் வயது முதிர்ந்த விவசாயிகள், முதல்முறையாக முற்றிலும் வறண்ட பாலாற்றை பார்ப்பதாகக் கூறுகின்றனர்.
பாலாற்றின் இந்த நிலைக்குக் காரணம், இடையில் எங்கும் தடுப்பணைகள் கட்டி தண்ணீர் சேமிக்கப்படாததே என அவர்கள் கூறுகின்றனர். ஆற்றில் வரும் நீர் முழுவதும் வீணாகச் சென்று கடலில் கலப்பதாகக் கூறும் விவசாயிகள், மழைக்காலம் வரும்வரை இந்தாண்டு தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் ஆதங்கப்படுகின்றனர்.
விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கான ஆதாரமாகவும் பாலாறு விளங்குவதால், மழைக்காலம் தொடங்குவதற்கு முன் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Comments