நோய்க்கு மருந்து தெரியாமல் 3 வயது சிறுமியை சோதனை எலியாக்கிய அரசு மருத்துவர்கள்... தலைமை செயலகம் முன்பு ஏட்டு தர்ணா..!

0 6398

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை மேற்கொண்டதால் பெண் குழந்தையின் கால் கருகிய நிலையில், காவல் உயர் அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச்சென்று 15 லட்சம் ரூபாய் வரை செலவிட்டும், எந்த ஒரு இழப்பீடும் வழங்காததால் விரக்தி அடைந்த  தலைமை காவலர் ஒருவர் தனது குழந்தையுடன் தலைமை செயலக வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்

சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த கோவிந்தன், ஓட்டேரி சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகள் பிரதியுஷாவை கையில் தூக்கிக் கொண்டு வந்தார். அவரை உள்ளே செல்ல அனுமதிக்காததால் தலைமை செயலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது மகளுக்கு எழும்பூர் அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை குறித்து பல்வேறு தரப்பில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்

ஆதங்கத்தில் இருந்த ஏட்டு கோவிந்தன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது சில காவல் அதிகாரிகள் அவரை தடுத்தனர். அப்போது தனது குழந்தைக்கு கால் போய்விட்டது, என்று கூறி அப்புறப்படுத்த முயன்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார் கோவிந்தன்

தனது வேலை போனாலும் பரவாயில்லை என்று மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோவிந்தன், அரசு மருத்துவர்களின் அலட்சியம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

சிறுமியின் கால் எப்படி இப்படி ஆனது ?என்று விசாரித்த போது கோவிந்தனின் கோபத்திற்கான காரணம் தெரியவந்தது. சிறுமி பிரதியுசா, 3 வயதை எட்டிய போது அவரது உடலில் நெப்ராட்டிக் சின்ட்ரோம் என்ற உப்பு அளவு அதிகமாக சுரக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் குழந்தையின் உடல் பருமன் அதிகரித்தும், சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு SRNS என்ற மருந்து வழங்கப்பட்டதால் உடலில் உள்ள புரத சத்துக்கள் வெளியேறி சிறுமி பலவீனமடைந்ததாக கூறப்படுகின்றது. இதனால் சிறுநீரகம் மற்றும் எலும்புகளில் உள்ள சுரப்பிகள் சுரப்பதற்கு தேவையான புதிய மருந்துகள் வழங்கி உள்ளனர்

தொடர்ந்து பெட்ரோசோனல் என்ற மருந்து வழங்கப்பட்டதால் காலில் அரிப்பு தன்மை ஏற்பட்டு, காலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டு இடது கால் கருகிய நிலைக்கு மாறி உள்ளது. கால் எதனால் பாதிக்கப்பட்டது என்று எந்த விளக்கமும் சொல்லாத மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு டயாலிசிஸ் மேற்கொண்டதால் நரம்பியல் தொடர்பான வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறார் கோவிந்தன்.

இடையில் சிறுமிக்கு மூளைக்காச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறிய மருத்துவர்கள், அதற்கான சிகிச்சை என சில மருந்துகளை வழங்கியதால், குழந்தையின், இடது கால் மற்றும் கை செயலிழந்ததாகவும், இதற்காக இனாக்ஸ்பெரின் என்ற ஊசியை காலை மாலை என இரண்டு வேளைகள் செலுத்திய மருத்துவர்கள் கருகிய காலை அகற்ற சொன்னதாக கூறப்படுகின்றது.

தொடர்ச்சியான 5 வருட சிகிச்சையில் 26 கிலோ இருந்த சிறுமி 14 கிலோவுக்கு எடை குறைந்து சுயநினைவு இல்லாத நிலைக்கு சென்றதால், தங்கள் குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்த கோவிந்தன், தவறான சிகிச்சை அளித்த எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் 2 முறையும் மனு அளித்தார். இதன் பேரில் தனி குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை மேற்க்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே காவல்துறை உயர் அதிகாரிகள் உதவுவதாக கூறியதை நம்பி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்து ,15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து , லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வாக்குறுதி அளித்த எந்த ஒரு காவல் உயர் அதிகாரிகளும் உதவவில்லை என்பதால் நீதிகேட்டு போராடுவதாக தலைமை காவலர் கோவிந்தன் தெரிவித்தார். அரசு உத்தரவிட்டும் இதுவரை விசாரணை குழுவே அமைக்கபடவில்லை என்று எழும்பூர் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் எழிலரசி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments