காப்பகத்தில் பராமரிக்கப்படும் 2 பச்சிளம் பெண் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

திருச்சியில் காப்பகத்தில் பரமாரிக்கப்பட்டு வந்த 2 பச்சிளம் பெண் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் 'சாக்சீடு' என்ற அரசு உதவி பெறும், குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் விட்டுச் செல்லப்படும் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் என 33 குழந்தைகள் கொண்டுவரப்பட்டு இக்காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன.
அதில் 8 குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் ஏற்படவே, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 3 மாத ஆண் குழந்தை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், கயல்விழி, பிரியா ஆகிய 2 கைக்குழந்தைகள் நேற்றிரவு மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 5 மாதங்களில் இக்காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 6 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலின்றி வளரும் கைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழப்பதாக கூறப்படும் நிலையில், நாள்தோறும் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் நேரில் சென்று காப்பக குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Comments