காரில் கூச்சலுடன் மது விருந்து.. விசாரித்த எஸ்.ஐ அவமதிப்பு.. சினிமா தயாரிப்பாளர் மகனின் அடாவடி செயல்..!

0 2750

சென்னையில் அரசு மருத்துவமனை அருகே காரில் அமர்ந்து கூச்சலிட்டபடி மதுகுடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் இளைஞர்கள், விசாரணை நடத்திய காவல்துறையினரையும் அவமரியாதை செய்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை, கேகேநகர் அரசு புறநகர் மருத்துவமனை அருகே உதவி ஆய்வாளர் முனுசாமி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் 3 பேர் காரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு, கூச்சலிட்டபடி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற எஸ்ஐ முனுசாமி, அந்த இளைஞர்கள் யார்? என விசாரித்துக்கொண்டிருந்தபோது ஒருவர் மரியாதை குறைவாகவும், சிகரெட்டை புகைத்து புகையை முகத்திற்கு நேராக ஊதியுள்ளார். எஸ்ஐ முனுசாமி, அவரை லேசாக தள்ளிய போதும் அந்த நபர் திரும்ப திரும்ப வந்து எஸ்ஐயின் முகத்தில் புகை விட்டுள்ளார்.

ப்ரீத் அனலைசர் இயந்திரத்தின் மூலம் பரிசோதனை செய்ததில் அவர்கள் குடிபோதையில் இருப்பது உறுதியானதால், அவர்களின் பெயர், விலாசம் கேட்ட போது சொல்ல மறுத்ததால் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையிலும், காரில் வைத்திருந்த மதுபாட்டில், சைடிஸ்களை அவர்கள் கையோடு எடுத்துச் சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில் எஸ்ஐயிடம் தகராறில் ஈடுப்பட்ட நபர் பிரபல சினிமா தயாரிப்பாளரின் மகன் விஷ்ணு என்பது தெரியவந்தது. இளைஞர்களுக்கு ஆதரவாக வந்த கிண்டி காவல் ஆய்வாளரிடம், எஸ்ஐயை மதுபோதையில் அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் அவர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கார் சோழமண்டல பைனாஸ் பெயரில் இருப்பதும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து சென்ற விஷ்ணு, வழக்கறிஞர்களோடு காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வேறு பணிச்சுமைகளுக்கு நடுவே கடமையாற்றும் காவலர்களுக்கு நேரும் இதுபோன்ற அவமதிப்புகள் மீது உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காவலர்களின் மாண்பை காக்க வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments