மதுரை நிஜ கில்லியில் பள்ளி மாணவியை பெண் கேட்ட வில்லி..! சிறுமியை மணம் முடித்து கொடுமை
மதுரையில் கில்லி பட பாணியில் 11ஆம் வகுப்பு மாணவியை ஊராட்சி தலைவியான தனது தாயுடன் சென்று பெண் கேட்டு மிரட்டி திருமணம் செய்து கொடுமைப்படுத்திய கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டான்.
கில்லிப்படத்தில் நாயகி , வீட்டிற்கு தாயுடன் செல்லும் வில்லன் கட்டாயப்படுத்தி திருமண நிச்சயதார்த்தம் செய்வது போன்று காட்சி இடம் பெற்று இருக்கும்
இதே போல நிஜத்தில் ஒரு சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவி கோமதி என்பவரது மகனான வெற்றிவேல் தான் இந்த லோ பட்ஜெட் முத்துப்பாண்டி..!
மதுரையை சேர்ந்த 16வயதான பள்ளி மாணவி ஒருவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு, சிறுமியின் பெற்றோரை மிரட்டிய கோமதி, கடந்த ஆண்டு அந்த மாணவியை தனது மகன் வெற்றி வேலுக்கு அரசனூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகின்றது.
திருமண செலவுக்கு பணமில்லை என்று திருமணத்தை தவிர்க்க நினைத்த மாணவி குடும்பத்தினரிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டு 10 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்து திருமணத்தை விமர்சையாக நடத்தி உள்ளார்
திருமணம் முடிந்த சில தினங்களில் வெற்றிவேல் தனது மனைவியுடன் மதுரையில் வீடு எடுத்து தங்கி உள்ளார். அவரது தந்தையும் அவர்களுடன் தங்கி இருந்துள்ளார். தனது கணவன் வெற்றிவேல் கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையாக இருப்பதும் , அவர் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றவழக்குகள் இருப்பதும் சிறுமிக்கு தெரியவந்துள்ளது .
வெற்றிவேல் நாள்தோறும் மது குடித்துவிட்டும் கஞ்சா போதையில் சிறுமியை அடித்து உதைத்து பாலியல் சைக்கோ போல கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
அண்மையில் கஞ்சா விற்பனை செய்ததாக கூறி வெற்றி வேலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அமைச்சரின் உறவினர் எனக்கூறி சில தினங்களில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த வெற்றிவேல் கடந்த இரு நாட்களாக அந்த சிறுமியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதால், காயங்களுடன் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சிறுமியான தனது மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததோடு, தற்போது அவரை கொலை செய்து விட்டு, வேறொரு திருமணம் செய்துகொள்ளபோவதாக வெற்றிவேல் மிரட்டி வருவதாக சிறுமியின் தாயார் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை தேடி வந்த தல்லாகுளம் போலீசார், இன்று அவனை கைது செய்தனர். மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வெற்றிவேலை பிடித்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments