காவிரியில் வெள்ளப்பெருக்கு.. கரையோரப் பகுதிகள் மூழ்கின..!

0 3031

மேட்டூர் அணையில் இருந்து மாலை 4 மணி நிலவரப்படி ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இத்துடன் பவானி உள்ளிட்ட ஆறுகளின் வெள்ளமும் சேர்ந்ததால் காவிரிக் கரையோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன...

வெள்ளி மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நொடிக்கு ஒரு இலட்சத்து 81 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. சுரங்க மின் நிலையம் வழியாக நொடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக நொடிக்கு ஒரு இலட்சத்து 57 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரிப் பழையபாலம், பவானிக் கூடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரமுள்ள முந்நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் காவிரிஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. குமாரபாளையம் - பவானி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களைத் தொடுமளவு வெள்ளம் பாய்கிறது. 

நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி கதவணையின் அனைத்து மதகுகளையும் திறந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கரையோரமுள்ள நீர்மின்நிலையமும் மூழ்கியுள்ளது.

ஜேடர்பாளையம் தடுப்பணை வெளியே தெரியாத அளவில் ஆறு முழுவதும் பரந்து விரிந்து வெள்ளம் பாய்கிறது. ஆற்றின் இருகரைகளிலும் விளைநிலங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பரமத்தி வேலூர் - கரூர் மாவட்டம் இடையே கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களைத் தொடுமளவு காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் காவிரியில் நீர்வரத்து இரண்டு இலட்சத்து 16 ஆயிரம் கன அடியாக இருந்தது. காவிரியில் 73 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் பாய்வதால் ஆற்றின் கரையோரமுள்ள விளைநிலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments