செஸ் ஒலிம்பியாட் தொடர்.. 5-ஆம் சுற்றில் அதிக டிரா செய்த இந்தியா..!

0 1493
செஸ் ஒலிம்பியாட் தொடர்.. 5-ஆம் சுற்றில் அதிக டிரா செய்த இந்தியா..!

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 5ஆவது சுற்றிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பெரும்பாலான போட்டிகளை டிரா செய்த நிலையில், தமிழக வீரர்கள் குகேஷ், அதிபன், சேதுராமன் உள்ளிட்டோர் வெற்றிப்பெற்றனர்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 5வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஏ, பி, சி என பிரிவுகளில் களம் இறங்கினர். இந்திய ஓபன் 'ஏ' பிரிவில், இந்திய வீரர் அர்ஜுன், ரொமேனியா வீரரை வீழ்த்தினார். அதே பிரிவில், விளையாடிய ஹரிகிருஷ்ண பென்டாலா, விதித் சந்தோஷ், நாராயணன் ஆகியோர் விளையாடிய போட்டிகள் டிராவில் முடிந்தன.

இந்திய ஓபன் 'பி' பிரிவில், தமிழக வீரர்கள் குகேஷ், அதிபன் ஆகியோர் ஸ்பெயின் வீரர்களை தோற்கடித்தனர். அதேபிரிவில், சரின் நிஹில் விளையாடிய போட்டி வெற்றித் தோல்வியின்றி சமனில் முடிந்த நிலையில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியுற்றார்.

இந்திய ஓபன் 'சி' பிரிவில், தமிழக வீரர் சேதுராமன் மற்றும் அபிமன்யு ஆகியோர் சிலி நாட்டு வீரர்களை தோற்கடித்த நிலையில், சூர்யா சேகர் விளையாடிய போட்டி டிராவானது.

மகளிர் 'ஏ' பிரிவில், இந்திய வீராங்கனை தன்யா சச்தேவ் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தினார். அதே பிரிவில், தமிழக வீராங்கனை வைஷாலி, கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி விளையாடிய போட்டிகள் சமனில் முடிந்தன.

மகளிர் 'பி' பிரிவில், ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டிகளை வந்திகா அகர்வால், பத்மினி ஆகியோர் டிரா செய்தனர். 'சி' பிரிவில், தமிழக வீராங்கனை நந்திதா, பிரேசில் வீராங்கனையை வீழ்த்திய நிலையில், ஈஷா, விஷ்வ வஸ்னாவாலா விளையாடிய போட்டிகள் டிராவானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments