இலங்கையில் நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலைப் பிரகடனம்

0 1470

இலங்கையில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது . போராட்டங்களை ஒடுக்க ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்கான பிரதான சாலையை மறித்து மாணவர்கள் 24 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தினர்.

இதனிடையே தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. துறைமுகம் தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஊழியர்கள் பெருவாரியாக இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். இதனால் கொழும்பில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ரயில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கில் பயணிகள் ரயில்நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

போராட்டங்கள் வலுப்பெற்று வருவதையடுத்து அதிபர் கோத்தபயா தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இலங்கையில் நள்ளிரவு முதல் அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது. ராணுவத்துக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. போராட்டத்தை ஒடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கடுமையான உத்தரவுகள் இடப்பட்டிருப்பதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments