நேட்டோவில் சேர வலியுறுத்த மாட்டோம் - உக்ரைன் அதிபர் அறிவிப்பு

0 3163

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள உக்ரைன் இனிமேல் வலியுறுத்தாது என கூறியுள்ள அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நிறுத்த உதவ வேண்டும் என பிரதமர் மோடிக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியதாலேயே அந்நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 14ஆவது நாளாக தாக்குதல் நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரை இரு நாடுகள் நடத்திய மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், நேட்டோவில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு இனி வலியுறுத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

பலமுறை வேண்டுகோள் விடுத்த நிலையிலும், உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டாததால் தனது மனநிலை மாறிவிட்டது எனவும், அதனால், இனிமேல், உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்த்துக்கொள்ளும்படி வற்புறுத்த மாட்டோம் என்று கூறியதுடன் யாரிடமும் தானம் பெறப் போவதில்லை எனவும் கூறினார்.

மேலும், ரஷ்யாவுடனான போர் காரணமாக, உக்ரைனை தங்களது அமைப்பில் இணைத்து கொள்ள நேட்டோ அஞ்சுகிறது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தன்னாட்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட டோனஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் சமரசத்தில் ஈடுபட விரும்புவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

மேலும், இந்த இரு பகுதிகளை ரஷ்யாவை தவிர வேறு எந்த நாடுகளும் தன்னாட்சி பெற்றதாக அங்கீகரிக்கவில்ல எனவும் உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் மக்கள் தனி நாடாக எப்படி வாழ முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவின் போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு உதவுமாறு வலியுறுத்தினார்.

சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து பிரதமர் மோடி ஜெலென்ஸ்கியிடம் வலியுறுத்திய போது, ஜெலென்ஸ்கி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன் ஒருபோதும் புதினின் வெற்றியாக இருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினால் ஒரு உக்ரைனின் நகரத்தை கைப்பற்ற முடியும் - ஆனால் அவரால் ஒருபோதும் ஒருநாடாக உக்ரைனை பிடிக்க முடியாது என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments