மகிந்த்ரா பொலிரோ சர்வீஸ் கட்டண பில்லில் ஊழியர்கள் பிராடு தனம்.. அக்கவுண்ட்ல வச்சிருக்காங்களாம்..!

0 14541

காஞ்சிபுரம் கெருகம்பாக்கத்தில் உள்ள மகிந்திரா சர்வீஸ் சென்டரில் செய்யாத வேலைக்கும் சேர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. தங்கள் தவறை உணர்ந்தாலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிக்கும் சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் தமிழ்வேந்தன், வழக்கறிஞரான இவர் தனக்கு சொந்தமான மகிந்திரா பொலிரோ காரை அண்மையில் காஞ்சிபுரம் கெருகம்பாக்கத்தில் உள்ள மகிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் சென்டரில் சர்வீஸுக்காக கொடுத்து அனுப்பி உள்ளார்.

முன் கூட்டியே கூறியபடி ஒரே நாளில் வாகனத்தை டெலிவரிசெய்யாமல் 3 நாட்கள் இழுத்தடித்து இறுதியாக முழுமையான சர்வீஸ் முடித்ததாக கூறி பொலிரோ காரை தமிழ் வேந்தனிடம் ஒப்படைத்துள்ளனர். சர்வீஸ் கட்டணமாக 8 ஆயிரத்து 923 ரூபாய் பணம் உடனடியாக ஸ்வைப்பிங் மிஷின் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அந்தகாரை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்ற தமிழ் வேந்தனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதற்காக காரை சர்வீஸ் விட்டாரோ அந்த முக்கிய வேலைகள் இரண்டு செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

அதாவது காரின் முன்பக்க கண்ணாடி வைப்பரில் விழும் தண்ணீர் காருக்குள் கசிவதாகவும், காரின் சக்கரம் ஒரு பக்கமாக இழுத்துசெல்வது போல உணர்வதாகவும் கூறி அதனை சரி செய்வதற்காகத்தான் சர்வீஸ் விட்டதாக கூறிய தமிழ்வேந்தன், பில்லில் இவை சரிசெய்யப்பட்டு விட்டதாக கூறி கட்டணம் வசூலித்த நிலையில், குறைகள் சரி செய்யாமலேயே பில்லில் கட்டணம் வசூலித்திருப்பது நியாயமா என்று சம்பந்தப்பட்ட சர்வீஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பி உள்ளார்

தங்கள் தவறை உணர்ந்த மகேந்திரா சர்வீஸ் நிறுவனமோ கூடுதலாக வசூலித்த பில்லிக்கு மாற்றாக குறிப்பிட்ட கட்டணங்களை குறைத்து 7 ஆயிரத்து 871 ரூபாய்க்கு புதிதாக ஒரு பில் அனுப்பி வைத்தனர். ஆனால் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து தமிழ் வேந்தன் சம்பந்தப்பட்ட சர்வீஸ் மையத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்

தமிழ் வேந்தனின் குற்றச்சாட்டு குறித்து சர்வீஸ் மைய மேலாளர் ராஜாவிடம் விசாரித்த போது செய்யாத வேலையை பில்லில் குறிப்பிட்டு கட்டணம் வசூலித்தது தங்கள் தவறு தான் என்றும் அவரிடம் மிகுதியாக வசூலிக்கப்பட்ட தொகை தங்கள் நிறுவனத்தில் உள்ள அவரது கணக்கில் தான் இருப்பதாகவும் அடுத்த முறை சர்வீஸ் செய்யும் போது கழித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், காப்பீடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தங்கள் சர்வீஸ் மையத்துக்கு 20 லட்சம் ரூபாய் வரவேண்டி உள்ளதாகவும் அதையே தாங்கள் மெதுவாக வசூலிக்கும் நிலையில் 1000 ரூபாய்க்காக கோர்ட்டு வரை சென்றுள்ள தமிழ் வேந்தனுக்கு தங்கள் வழக்கறிஞர் மூலம் பதில் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

வாகனங்களை சர்வீஸுக்கு விடும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஸ்பேர் பார்ட்ஸ்-கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதா ? என்று சரிபார்ப்பதில்லை, அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சில வாகன சர்வீஸ் மையங்கள் மோசடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக செய்து வருவதாக வாகன உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments