கங்கை விரைவுச் சாலை.. அடிக்கல் நாட்டினார் பிரதமர்..!

0 2352
கங்கை விரைவுச் சாலை.. அடிக்கல் நாட்டினார் பிரதமர்..!

உத்தரப்பிரதேசத்தில் 594 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆறுவழிச்சாலை அமைக்கும் கங்கை விரைவுச் சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமது அரசு ஏழைகளின் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் முதல் பிரயாக் ராஜ் வரை 12 மாவட்டங்களின் வழியாகப் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் 594 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆறுவழிச்சாலை அமைக்கும் திட்டம் கங்கை விரைவுச் சாலைத் திட்டம் எனப்படுகிறது.

இந்தச் சாலையின் இடையே விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுபாதையும் அமைக்கப்பட உள்ளது. 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்துக்கு ஷாஜகான்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

 நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கங்கை விரைவுச்சாலை அமைப்பதால் இந்த மண்டலத்தில் தொழில்வளமும் வேலைவாய்ப்புகளும் பெருகும் என்றும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அடுத்த தலைமுறை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மிகவும் நவீன மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்கும் நாள் நெடுந்தொலைவில் இல்லை எனத் தெரிவித்தார். விரைவுச் சாலையின் வழியில் புதிய விமான நிலையங்கள் கட்டப்படுவதுடன், புதிய ரயில்பாதையும் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நாட்டின் வளங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படுவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும் எனக் குறிப்பிட்டார். காசியில் சிவனை வழிபட்டதையும், கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பூமாரி பொழிந்து பாராட்டியதையும் கேமராவில் படம்பிடித்ததால் மக்கள் கண்டதாகவும், ஆனால் தமது அரசு ஏழைகளின் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments