தூத்துக்குடியில் கொட்டித் தீர்க்கும் கனமழை..! தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர் !

0 2816

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. திருச்செந்தூர் முருகன் கோவிலின் வெளி மண்டபங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

திருச்செந்தூர் முருகன் கோவில் வெளிமண்டபங்களில் முழங்காலளவு மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. உள்மண்டபத்திலும் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
நாழிக்கிணற்றுக்குச் செல்லும் நடைபாதையில் வாய்க்காலில் செல்வதுபோல் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

 

காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி ஆகிய ஊர்களிலும் சாலைகள் தெருக்களில் பெருக்கெடுத்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

சாத்தான்குளம் கடைத்தெரு, வாரச்சந்தை, பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. சாத்தான்குளம் தூய ஸ்தேவான் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது

 

தூத்துக்குடியில் காலை முதல் பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கோவில்பட்டி, விளாத்திக்குளம், எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் ஆகிய ஊர்களிலும் 2 மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை பெய்தது.

 

தூத்துக்குடி அருகே வாலசமுத்திரம் என்னும் ஊரில் உள்ள இரண்டு ஓடைகளுக்கு நடுவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்புத் துறையினர் வடம் கட்டி அங்கிருந்த 25 பேரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments