கடைக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லையா? சர்ச்சை போதகர் மீது எப்.ஐ.ஆர்

0 13090
கடைக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லையா? சர்ச்சை போதகர் மீது எப்.ஐ.ஆர்

சென்னை அடுத்த குன்றத்தூரில் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பேசிய பெண் போதகர் ஒருவர் , கடைகளுக்கு பொருள் வாங்கச்செல்லும் சிறுமிகளிடம் வியாபாரிகள் அத்துமீறுவதாக பேசி சர்ச்சையில் சிக்கிய நிலையில் அந்த போதகர் மீது 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை அடுத்த குன்றத்தூரில் உள்ள சி.எஸ்.ஐ உயிர்ந்தெழுந்த மீட்பர் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தில் போதகர் பியூலா செல்வராணி என்பவர் தேவ செய்தி கொடுப்பதாக பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார்.

பெண்களுக்கு குடும்பத்தில் பாதுகாப்பில்லை என்று பேச்சை தொடங்கிய அவர், பள்ளிக்கூடங்களில் சுத்தமாக பாதுகாப்பில்லை என்றார். தனது கணவர் பள்ளியில் ஆசிரியராக இருப்பதாகவும் , இருந்தாலும் பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும், ஆண் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல பெண் ஆசிரியைகளிடம் இருந்தும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி அவர்களது கடைகளுக்கு பொருள் வாங்கச்செல்லும் சிறுமிகளிடம் பொருட்கள் கொடுக்கும் போது அந்த கடைக்காரர் சிறுமிகளிடம் அத்துமீறுவதாக பேசியதால் சர்ச்சை உண்டானது.

பியூலாவின் இந்த வீடியோ வைரலான நிலையில், மத போதகர் பியூலா செல்வராணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாடார் மகாஜன சபை மற்றும் பல்வேறு வியாபார அமைப்புகள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில்,வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பியூலாவை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனர். வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும் , போதகர் பியூலா மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து கையில் மைக் இருக்கிறது என்று சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய போதகர் பியூலா மீது ஜாமீனில் வெளியே வர இயலாத 5 சட்டபிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பியூலாவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments