வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !

0 9324

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததை அடுத்து, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. வட தமிழகம் - தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 340 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருமாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும், அது வலுப்பெறாது எனவும் நேற்றுவரை கருதப்பட்ட நிலையில், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments