இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ்... இந்தியாவிலும் பரவுகிறதா? தீவிர ஆய்வு.!

0 2467

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரசின் AY.4.2 மரபணு மாற்ற வைரஸ் இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி எம்சிஐஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரிட்டனில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசின் மரபணு மாற்ற வடிவமான AY 4.2  இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மன்சுக் மாண்டவியா இந்த மரபணு மாற்ற வைரசின் தன்மைகள் குறித்து ICMR  எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக கூறினார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த வைரஸ் எந்த அளவுக்கு பரவும் என்பதை கூற இயலாது எனவும் அவர் கூறினார்.  ஆனால்  இந்த மரபணு மாற்ற வைரஸ் குறித்து கடந்த வாரம் தகவல் வெளியிட்ட பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமை, டெல்டா மரபணு மாற்ற வைரசை விட இது வேகமாக பரவக்கூடியது என தெரிவித்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்குவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மன்சுக் மாண்டவியா, உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப கமிட்டி கோவேக்சினுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாகவும், மற்றோர் கமிட்டி அதை ஆராய்ந்து முடிவெடுத்தபின், கோவேக்சினுக்கு இன்றே அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

குழந்தைகளுக்கான ஸைடஸ் கெடிலாவின் ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு என்ன விலை நிச்சயிக்கலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், குழந்தைகளுக்கான தடுப்பூசி என்பதால் மத்திய அரசு கூடுதல் கவனத்துடன் அது குறித்து கண்காணிக்கிறது என்றார். இந்த தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கிடைத்த பின் அதன் உற்பத்தி துவங்கும் என்றார்.

தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவு படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக மாநில சுகாதார அமைச்சர்களை மன்சுக் மாண்டவியா நாளை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments