பாக். தீவிரவாதம், சீனா ஆக்ரமிப்புக்கு பதிலடி -பிரதமர் மோடியின் ஐநா.பொதுசபை பேச்சு

0 2330

ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கும், நிலத்தை சட்டவிரோதமாக ஆக்ரமித்து தனது எல்லையை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சீனாவுக்கும் கண்டனம் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க சர்வதேச மருந்து நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார். 

3 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திரமோடி, வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிசுடன் இருதரப்பு வர்த்தகம் கொரோனா தடுப்புப் பணிகள் உள்பட முக்கியப் பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தார். தொடர்ந்து இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் சுதந்திர வர்த்தகம் குறித்து அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் கொண்ட குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலும் பிரதமர் உரை நிகழ்த்தினார்.

இதையடுத்து நியுயார்க் சென்ற மோடி அங்கு நடைபெற்ற 76வது ஐநா.பொதுசபை கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் உலக நாடுகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறிய மோடி, கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய வருமாறு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியா ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாடு என்று கூறிய பிரதமர், இந்தியாவின் பன்முகத்தன்மையை விவரித்தார். வீடற்றவர்கள் மற்றும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் இந்தியா தீர்வு கண்டிருப்பதாகவும், இந்தியா வளரும் போது உலகம் வளர்ச்சியுறும் என்றும் மோடி தெரிவித்தார்.

தீவிரவாதத்தை தனது கேடயமாகப் பயன்படுத்தும் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, தீவிரவாதம் இருமுனை ஆயுதம் என்றும் பயன்படுத்துபவருக்கே எதிராக திரும்பும் என்றும் எச்சரித்தார். ஆப்கான் மண்ணை தீவிரவாத செயல்களுக்குப் பயன்பட அனுமதிக்க மாட்டோம் என்றும் மோடி உறுதிபடத் தெரிவித்தார். நில ஆக்ரமிப்பு செய்யும் சீனாவையும் மறைமுகமாக கண்டித்த மோடி, உலக நாடுகள் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பதே ராஜதந்திரம் என்ற சாணக்கியரின் மேற்கோளை சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஜான் கென்னடி விமான நிலையத்தில் இருந்து இந்தியா புறப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments