அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

0 2360

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவும், நான்கு நாடுகள் தலைவர் கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் குவாட் மாநாடு வாஷிங்டனில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 24ஆம் நாள் நடைபெற உள்ளது. அதேபோல் நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் செப்டம்பர் 25ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக இன்று டெல்லியில் இருந்து அவர் தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவுக்குப் புறப்படுமுன் ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, இந்திய - அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், மண்டல மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாட்டு நலன்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோசிகிடே சுகா ஆகியோருடன் தானும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார். அது இந்தோ பசிபிக் மண்டலத்தில் எதிர்காலத் திட்டங்களில் முன்னுரிமையை அடையாளம் காண்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.

தனது அமெரிக்கப் பயணம் இரு நாடுகளிடையான உறவை மேலும் வலுப்படுத்துவதாகவும், ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனான உறவுகளை ஒருங்கிணைப்பதாகவும் அமையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments