சிங்காரச்சென்னை- 2.0... புத்தெழில் பெற்ற ராஜீவ்காந்தி சாலை..!

0 4482
சிங்காரச்சென்னை- 2.0... புத்தெழில் பெற்ற ராஜீவ்காந்தி சாலை..!

சென்னையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பக்கிங்காம் கால்வாயின் இருபுறத்திலும் மக்கள் பயன்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு நடைபாதைப் பூங்கா மற்றும் மியாவாகி அடர்வனக் காட்டினை உருவாக்கி வருகிறது சென்னை மாநகராட்சி... இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்.

சென்னையை சுத்தமான சுகாதாரமான மாநகரமாக மாற்ற தீவிர தூய்மைப் பணி திட்டம், சிங்காரச்சென்னை 2.0, ஸ்மார்ட் சிட்டி திட்டம், அழகுபடுத்துதல் திட்டம் என பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ராஜிவ்காந்தி சாலை நெடுகிலும், பறக்கும் ரயில் பாலத்திற்கு கீழே பக்கிங்காம் கால்வாயை ஒட்டி இருபுறங்களிலும் மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் குப்பைகள், முள்புதர்களாக மண்டிக் கிடந்தன. அங்கு தெற்கு ரயில்வே அனுமதியுடன் மக்கள் பயன்படுத்தும் வகையில், நடைபாதை அமைத்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி வருகிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம்..

கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை பக்கிங்காம் கால்வாய்க்கு இடதுபுறம் கால்வாயை ஒட்டி மியாவாகி அடர்வனக் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே நடந்து செல்வோர் மற்றும் சைக்கிளில் செல்வோருக்கு மட்டும் பசுமை வழி உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

ராஜிவ்காந்தி சாலையை ஒட்டிய கால்வாயின் வலது புறத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள பாதை, குழந்தைகள் விளையாட ஸ்கேட்டிங் வெளி, சிறுவர் பூங்கா, பெரியவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குடும்பத்துடன் பொழுதுபோக்கும் வகையில் இருக்கைகள், திறந்தவெளி கலைக்கூடம் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன

கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் முதல் இந்திரா நகர் ரயில்நிலையம் வரை ஒரு கட்டமாகவும், இந்திரா நகர் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை ஒரு கட்டமாகவும் 20 கோடி ரூபாயில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காலை மற்றும் மாலை வேளைகளில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வகையிலும், சைக்கிளைப் பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டு வரும் இதன் இறுதிக் கட்டப் பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் இரண்டு மாதத்திற்குள் முழுவதுமாக மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

யாராலும் பயன்படுத்த முடியாத அளவில் இருந்த இந்த பகுதி தற்போது மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் புதுப்பொலிவுடன் மாறி வருவது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments