பயணிகள் ரெயிலை இயக்கிய சிறுவன்; கூட்டாளியுடன் கைது..! அதிர்ச்சியில் அதிகாரிகள்

0 5402

மேற்கு வங்க மாநிலம் ஷியால்டாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலி அடையாள அட்டையை வைத்து ஆள்மாறாட்டம் செய்து பயணிகள் ரயிலை இயக்கி வந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை ஈரோட்டில் வைத்து ரயில்வே காவல்துறையினர் கைது செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஷியால்டாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் ஈரோடு ரயில் நிலையம் வழியாக செல்வது வழக்கம். கடந்த 12ந்தேதி இந்த ரயிலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து செல்லும் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இரண்டு பேர் அமர்ந்து இருப்பதை கண்டு ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு பேரின் பையிலும் ரயிலை இயக்க பயன்படுத்தும் உடை, ரயிலை நிறுத்தவும் இயக்கவும் பயன்படுத்தும் சிவப்பு - பச்சை கொடி, டார்ச் லைட் மற்றும் ரெயிலை இயக்கும் பைலட்டுக்குரிய போலியான அடையாள அட்டைகள் கைப்பற்றபட்டதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இரண்டு பேரில் ஒருவன் 17-வயது சிறுவன் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி மேற்கு வங்கம் மாநிலம் ஷியால்டாவில் பயணிகள் ரயிலை இயக்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கு வங்கம் மாநிலம் மஷிடாபாத் சாட்டை ஹரிராம்பூர் பகுதியை சேர்ந்த எஸ்ராபில் ஷேக் என்ற 21 வயது இளைஞருடன் சேர்ந்து 17 வயது சிறுவன் ஷியால்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை இயக்கி உள்ளான். ரயில் ஓட்டுநருக்கு உதவி ஓட்டுநராக உள்ளவர் தனது சொந்த வேலையாக சென்றுவிடும் போது அவரது பெயரில் அடையாள அட்டையை போலியாக தயாரித்து வைத்து கொண்டு மாதம் 10-ஆயிரம் முதல் 20-ஆயிரம் ரூபாய் வரையில் ஊதியம் பெற்றுக்கொண்டு இந்த சிறுவன் ரயிலை முறைகேடாக இயக்கியது தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் தனது நண்பரான எஸ்ராபில் ஷேக்கை அழைத்து கொண்டு பயணிகள் ரயிலை இயக்கும் ரயில் ஓட்டுநரிடம் வேலை கேட்டதாகவும், ரயில் ஓட்டுநரும் இரண்டு மாதங்கள் கழித்து தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து எஸ்ராபில் ஷேக் எர்ணாகுளத்தில் 2-மாதங்கள் கட்டிட வேலை செய்து விட்டு வருவதாக கூறியுள்ளான். இதனால் எர்ணாகுளம் வரையில் சென்று சுற்றிபார்த்து விட்டு வருவதாக கூறி அந்த சிறுவன் ,எஸ்ராபில் ஷேக் உடன் ஷியால்டாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் வந்ததாக கூறியுள்ளான்.

இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஜ.ஜி ஆகியோருக்கு இந்த தகவல் தெரிவித்ததுடன் மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலை இயக்கிய ஒரிஜினல் ரயில் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். அந்த சிறுவன் ரயிலை இரண்டு ஆண்டுகள் இயக்கியது உண்மை என்றால் மேற்கு வங்க மாநிலத்தில் ரயில்வே துறையில் எப்படி இது அனுமதிக்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிடிபட்ட இரண்டு பேரும் பங்காளதேஷ் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் வந்தவர்களா ? என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இரண்டு பேரில் ரயிலை இயக்கிய சிறுவன் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், எஸ்ராபில் ஷேக் பெருந்துறை கிளைச்சறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணிக்கும் ரயிலை சிறுவன் இயக்கிய சம்பவம் ரயில்வே அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments