எஜமானரை காக்க பாம்பை எதிர்த்து போராடி பலியான நாய்..! விஸ்வாசத்திற்கு மற்றும் ஒரு உதாரணம்

0 24194
கோவையில் எஜமானருக்காக பாம்புடன் போராடி உயிரை விட்ட வளர்ப்பு நாய்..!

வீட்டு வளாகத்திற்குள் புகுந்து காருக்கு அடியில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பிடம் இருந்து, எஜமானரை காப்பாற்ற போராடிய வளர்ப்பு நாய் ஒன்று, தனது உயிரைக் கொடுத்த சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோயமுத்தூர் ஜி.என்.மில்ஸ் வைலட் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவர் தனது வீட்டில் பொமரேனியன் நாய் ஒன்றை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். புதன்கிழமை இரவு 11 மணி அளவில், அவர் வளர்த்து வந்த 12 வயதுடைய பொமரேனியன் நாய் நீண்ட நேரம் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

நாய் குரைப்பதைக் கண்டு சுரேந்தரின் தாயார் கதவை திறந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வாசலில் பாம்பு ஒன்று கிடந்ததாகவும், அதனை வீட்டுக்குள் நுழைய விடாமல் நாய் தடுத்து போராடியதும் தெரியவந்தது. அதற்குள்ளாக சரசரவென்று அங்கிருந்து ஊர்ந்து சென்ற பாம்பு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டது.

அந்த பாம்பை விடாத நாய் குரைத்துக் கொண்டே காரின் அடியில் இருந்த பாம்பின் வாலை பிடித்து வெளியே இழுத்துள்ளது . சுருண்டுகிடந்த பாம்பு ஆவேசமாகத் திரும்பி நாயின் கண் மற்றும் காதில் கடித்ததில், நாய் பரிதாபமாக பலியானது. இதைக் கண்ட சுரேந்தர் உடனடியாக ஸ்நேக் ரெஸ்க்யூ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இரவு 12 மணியளவில் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் , காருக்குள் பதுங்கிய பாம்பைத் தேடிய போது காருக்கு அடியில் இருந்து வீட்டின் மாடிப் படிக்குள் புகுந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தார். பிடிபட்ட பாம்பு 4 அடி நீளம் இருந்த கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்தது என்றும், வேகமாக பரவும் விஷம் கொண்டது என்றும் தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக பாம்பினால் வீட்டில் உள்ளோருக்கு ஆபத்தில்லை என்றபோதும், அவர்களை காப்பாற்றும் முயற்சியில் எஜமானருக்கு விசுவாசமாக பாம்புடன் போராடி வளர்ப்பு நாய் உயிரை விட்டதால் சுரேந்தர் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments