கர்ப்பிணியான காதல் மனைவி எரித்துக் கொலை ! கர்ப்பத்துக்கு காரணம் யார் ?

0 5569
கர்ப்பிணியான காதல் மனைவி எரித்துக் கொலை ! கர்ப்பத்துக்கு காரணம் யார் ?

மதுரை அவனியாபுரம் அருகே காதலி கர்ப்பிணியானதால் காதலனுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிலையில், திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் கர்ப்பிணி மனைவியை கணவன், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த அவனியாபுரம் ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் வறுகடலை மில் அருகே ஒரு முட்புதருக்குள் எரிந்த நிலையில் இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த சகாயராஜ்-செல்வமேரி தம்பதியினரின் மகள் 20 வயதான கிளாடிஸ் ராணி என்பதும், திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் அவர் எரித்துக் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தின் திகில் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரும் கிளாடிஸ் ராணியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பாக காதல் எல்லை மீறியதால் கிளாடிஸ் ராணி கர்ப்பம் அடைந்தார். இதை அறிந்த கிளாடிஸ் ராணியின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கிளாடிஸ் கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை எனக்கூறி ஜோதிமணி திருமணத்திற்கு மறுத்துள்ளான். இருந்தாலும் கடந்த 2ஆம் தேதி அன்று ஜோதிமணி உடன் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்ததும் இருவரும் கிளாடிஸ் ராணியின் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் 4ஆம் தேதி வெளியே சென்று வரலாம் என ஜோதிமணி கிளாடிஸ் ராணியை அழைத்துள்ளான். இருவரும் கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளனர். அவனியாபுரம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் வைத்து கிளாடிஸ் ராணியை கர்ப்பிணி என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்த ஜோதிமணி, கிளாடிஸ் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான்.

இரவில் ஜோதிமணி மட்டும் தனியாக வீடு திரும்பி வந்த நிலையில் கிளாடிஸ் ராணியை காணவில்லை என நாடகமாடியதோடு கிளாடிஸ் ராணியின் பெற்றோர்களுடன் இணைந்து ஜோதிமணி ஊர்முழுக்க தேடியுள்ளான். இதனை அடுத்து நான்காம் தேதி மாலை சோழவந்தான் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று கிளாடிஸ் ராணியின் பெற்றோர் புகார் செய்த நிலையில் போலீசாரி சந்தேக வளையத்தில் சிக்கியதால் ஜோதிமணி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணையில், காதலித்து திருமணம் செய்த மனைவி கிளாடிஸ் ராணியின் 4 மாத கர்ப்பத்திற்கு தான் காரணமல்ல என்றும், அந்த சந்தேகத்தை கேட்ட போது கிளாடிஸ் சொல்ல மறுத்ததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலம் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்ததாக ஜோதிமணி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். பொருந்தாக் காதல் எக்காலத்திலும் இணைந்து வாழாது என்பதற்கு இந்த விபரீத காதல் ஜோடிகளே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments