தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி; முதலமைச்சரின் அடுத்த நடவடிக்கை..!

0 3348
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் :பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தைத் தமிழக அரசுக்குக் குத்தகைக்கு வழங்கக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே கொரோனாவுக்கு எதிரான சிறந்த ஆயுதமாக உள்ளதால், உள்நாட்டில் தடுப்பு மருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியுள்ளதாகக் கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டில் மத்திய அரசின் எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பு மருந்து உற்பத்தி வளாகம் பயனின்றிக் கிடப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு ஏற்கெனவே 700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில் கூடுதல் நிதி தேவை என்பதால் பயனின்றிக் கிடப்பதாக அவர் கூறியுள்ளார். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உற்பத்தியை துவக்கினால் நாட்டின் தடுப்பு மருந்து உற்பத்தி அதிகரிப்பதுடன், நாடு முழுமைக்குமான குறிப்பாகத் தமிழகத்துக்கான தடுப்பு மருந்து தேவையை நிறைவு செய்ய முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தைக் கடந்தகாலப் பொறுப்புகள் இன்றி, முழுச் செயல்பாட்டுச் சுதந்திரத்துடன் தமிழக அரசுக்குக் குத்தகைக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். பொருத்தமான தனியார் நிறுவனத்தை அடையாளம் கண்டு மருந்து உற்பத்தியை விரைவில் தொடங்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்கும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தடுப்பு மருந்து உற்பத்தி தொடங்கியதும் மத்திய அரசின் முதலீட்டின் ஒருபகுதியைத் திரும்ப வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியுள்ள முதலமைச்சர், தடுப்பு மருந்து வளாகத்தை விரைவில் பயன்படுத்தும் வகையில் அதை உடனடியாகத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments