இதையெல்லாம் செய்தால் அக்னி நட்சத்திரத்திலும் மௌனராகம் கார்த்திக் போல ஜாலியாக சுற்றலாம்!

0 4809

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்' என்னும் கத்தரி வெயில் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.வெயிலின் உக்கிரத்தால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால், அக்னி வெயிலையும் கூலாக சமாளிக்கலாம்.

வெயிலில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலின் நீர்ச்சத்து குறையும். எனவே, அதை ஈடுகட்டும் அளவுக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
இல்லையென்றால், டிஹைட்ரேஷன், சன் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.எனவே, தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

வெயிலில் வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். குடை பிடித்து கொள்ளலாம். டீ, காபி அருந்துவதைக் குறைத்துக்கொள்வதுடன், ஐஸ் வாட்டர், குளிர்பானங்கள் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். மாறாக இளநீர் அருந்தலாம், சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாம். மண்பானையில் ஊறிய தண்ணீரைக் குடிப்பது நல்லது. நீர்மோர், பானகம், சர்பத், பதநீர் போன்றவை எல்லாவிதத்திலும் நல்லது.

கோடைக்காலத்தில், குழந்தைகள் தொடங்கி முதியவர் வரை அனைவரையும் வதைக்கும் முக்கியப் பிரச்னை வியர்க்குரு. உடலில் வியர்வைத் தங்குவதால்தான் வியர்க்குரு உருவாகிறது. இதைத் தடுக்க, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். வெயிலில் வெளியே சென்று வீடுதிரும்பியதும் கை, கால்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். வியர்க்குருவைச் சொரிந்தால் அது தொற்றுக்கு வழிவகுக்கும். மருத்துவர் ஆலோசனை பெற்று களிம்புகள், பவுடர்களைப் பயன்படுத்தலாம்.

* வியர்வை நாற்றம், கோடைக்காலங்களில் அனைவருக்குமான பொதுவான பிரச்னையாக இருக்கிறது. அக்குள் போன்ற மறைவிடங்களில் உள்ள ரோமங்களை நீக்கி, முறையாகச் சுத்தம் செய்து பராமரித்து வந்தாலே வியர்வை நாற்றம் கட்டுப்படும். அக்குள் பகுதிகளில் பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்க முடியாது. ஆனால், ஆன்டிபாக்டீரியல் சோப்புகளைப் பயன்படுத்திக் குளிப்பதன் மூலம் பாக்டீரியாவை கட்டுப்படுத்த முடியும். பெர்ஃப்யூம் (Perfume), டியோடரன்ட் (Deodorant), ஆன்டிபெர்ஸ்பிரன்ட் (Antiperspirant) போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* வெயில் கொளுத்தும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். வெயில் பாதிக்காமலிருக்க `சன் கிளாஸ்' அணிந்துகொள்வது நல்லது. நீண்டநேரம் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் உடலில் படுவதால், சருமப் பிரச்னைகள் ஏற்படும். எனவே, வெயிலில் வெளியே செல்வதற்குமுன், உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் `சன்ஸ்கிரீன்' லோஷனைத் தடவிக்கொள்ளலாம். உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை அணிவதும் பலன் தரும்.

உடலில் ஈரம் தங்காத அளவுக்கு வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தங்கி படர்தாமரை, அரிப்பு போன்ற பாதிப்புகளை உண்டாகும். படர்தாமரைக்கான க்ரீம்களை மருத்துவர் ஆலோசனையுடன் பூசிக்கொள்ளலாம். அடர் நிறங்களைத் தவிர்த்து வெளிர்நிற ஆடைகளை அணியலாம். சற்று தளர்வான ஆடைகளை அணிவது நல்லது.

* நோய் எதிர்ப்புத் திறன் குறைவதாலும், சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களாலும் வேனிற்கால சீழ்க் கட்டிகள் உண்டாகும். முதுகு, கழுத்து, அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் இவை உருவாகலாம். சிறிய கொப்புளங்கள்போலக் காட்சியளிக்கும் இந்தக் கட்டிகளை உடைக்கக் கூடாது. மருத்துவரை அணுக வேண்டும். இத்தகைய சூழலில், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடாமலிருப்பது நல்லது.

சிக்கன் பாக்ஸ்' எனப்படும் சின்னம்மையை உருவாக்கும் `வெரிசெல்லா ஸோஸ்டர்' (Varicella Zoster) என்ற வைரஸ் கோடைக்காலத்தில் வீரியமாகச் செயல்படும். இந்த வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை விரைவாகத் தாக்கும்.நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கும் சின்னம்மை ஏற்படும். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து காற்றின் மூலம் மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும்.பின் கழுத்து, முதுகு, கை போன்ற இடங்களில் சிறு சிறு கொப்பளங்கள் உண்டாகும். இந்தக் கொப்புளங்களை உடைக்க கூடாது. அதிக அரிப்போ, காய்ச்சலோ இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். அம்மை நோய்க்குத் தடுப்பூசி இருப்பதால், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.

கோடையில் பலருக்கும் தலைமுடி வறட்சியாகக் காணப்படும். எனவே, குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகத் தலையில் எண்ணெய் தடவி, தலைக்குக் குளிப்பதால் இந்தப் பிரச்னையைத் தடுக்கலாம். தலையில் அதிகமாக வியர்த்தால், அழுக்கு சேர்ந்து அரிப்பு ஏற்படும். எனவே, வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும், தலைக்குக் குளிக்க வேண்டும். தலையில் பொடுகு, பூஞ்சைத் தொற்று பாதிப்புள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். பகலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், தலையில் தொப்பி அணியலாம் அல்லது குடை எடுத்துச் செல்லலாம்.

*புற ஊதாக் கதிர்களின் வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உணவில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமுள்ள ஆரஞ்சு, கேரட், மாம்பழம், பப்பாளி, தர்பூசணி மற்றும் கீரைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.காரம் நிறைந்த, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.சுகாதாரமற்ற இடங்களில் சாப்பிடுவதால், டைபாய்டு போன்ற தொற்றுநோய்கள் வரலாம். எனவே, முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.

கோடையில் ஏற்படும் சரும வறட்சியால் பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்க தினமும் இரவில் பாதங்களைக் கழுவி, சுத்தப்படுத்திவிட்டு, தரமான மாய்ஸ்ச்சரைசர் களிம்பைப் பூசிக்கொள்ளலாம்.கோடைக்காலத்தில் ஷூ அணிவதைத் தவிர்க்கலாம் அல்லது தரமான சாக்ஸுகளைப் பயன்படுத்த வேண்டும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments