கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை !

0 3624

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிகைக்களை தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்டம் தோறும் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதோடு, கூடுதல் சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலம் முழுவதும் அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவினர் தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் வீடு, வீடாக சென்று பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பயன்படுத்துவது உள்ளிட்டவை கடைபிடிக்க படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தை ஒட்டி அண்டை மாநில எல்லைகளில் வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் பணியும் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெறுகிறது. இதே நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மாவட்டங்களில் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் சென்னையில் கூடுதலாக 11,875 படுக்கைகளை தயார் செய்யும் வகையில் கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயின் உதவியுடன் 500 ரயில் பெட்டிகளையும் சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக மருத்துவ பணியாளர்கள் வந்து சோதனை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதால் அதற்கு ஏற்ப மருத்துவர்களும், பணியாளர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னைக்கு மட்டும் 150 மருத்துவர்கள் வந்துள்ளனர். களத்தில் உள்ள சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments