மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி - 22 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அரசு குளிர்சாதன சொகுசுப் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
22 படுகாயமடைந்தனர். வேளாங்கண்ணியில் இருந்து அரசு போக்குவரத்து கழக சொகுசு பேருந்து நேற்றிரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வந்த பேருந்து, வளைவில் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி, தலைக்குப்புற கவிழ்ந்தது.
பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், ஓட்டுநர், பயணிகள் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர், கிளீனர், உட்பட 22 பேர் படுகாயமடைந்து கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த பகுதியில் கடுமையான மூடுபனியாக இருந்த நிலையில், பேருந்து வளைவில் திரும்ப முயன்ற போது, எதிரே வந்த லாரி புலப்படாமல் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Comments