திருமணமான 44 நாட்களில் , மனைவி மீது சந்தேகம் : கத்தியால் மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்ட கணவன் !

0 66684

திருமணமாகி ஒரு மாதம் கடந்த நிலையில் அத்தை பையனுக்கு கேக் வாங்கி கொடுத்த மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், கத்தியால் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் கோராத்துப்பட்டியை சேர்ந்த 39 வயதான தங்கராஜ் என்பவனுக்கு அவரது உறவுக்காரப் பெண்ணான 19 வயதுடைய மோனிஷா என்பவருடன் பிப்ரவரி 24ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்பாக மோனிஷா பி.பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருமணம் முடிந்த நிலையில் மோனிஷா செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாகவும், வாட்சப்பில் சேட்டிங்க் செய்வதாகவும் கூறி அடிக்கடி தங்கராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒருக்கட்டத்தில் மோனிஷாவை தங்கராஜ் கண்டிக்கவும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட உறவினர்கள் சமாதானம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கராஜ் வெளியே சென்றிருந்த போது அவரது வீட்டிற்கு மோனிஷாவின் அத்தை மகன் வந்துள்ளார். அத்தை மகனுக்கு வெளியே சென்று கேக் வாங்கி வந்து மோனிஷா கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவரும் பேசிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு தங்கராஜ் வரவே, அவரிடமும் மோனிஷாவின் அத்தை மகன் பேசி விட்டு சென்றுள்ளார். அத்தை மகன் போகும் வரை பொறுமை காத்திருந்த தங்கராஜ் அவர் வீட்டை விட்டு நகர்ந்ததும் மோனிஷாவிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. தான் இல்லாத போது எதற்கு அத்தை மகன் வந்தான் என்றும், எதற்காக கேக் வாங்கி கொடுத்தாய் எனவும் கேள்வி கேட்டு தங்க ராஜ் சண்டையிட அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட கோபமடைந்த தங்கராஜ், கேபிள் வயரை கட் செய்ய பயன்படுத்தும் கத்தியால் மோனிஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, கேபிள் வயரால் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அடுத்த நாள் காலை மோனிஷாவின் வீட்டு கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். பின்னர் வீராணம் போலீசாருக்கு தகவலளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தங்கராஜ் மற்றும் மோனிஷாவின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தன்னை விட 20 வயது சிறிய பெண்ணை திருமணம் செய்ததால் ஏற்பட்ட சந்தேகத்தால் திருமணமான ஒரு மாதத்தில் மனைவியை கொலை செய்த கணவனின் செயலால் உறவினர்கள் சோகத்தில் உறைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments