காட்டுக்குள் பிரியாணி கொண்டாட்டம்... கண்டித்த பெற்றோர் திண்டாட்டம்

0 80386
காட்டுக்குள் பிரியாணி கொண்டாட்டம்... கண்டித்த பெற்றோர் திண்டாட்டம்

தன்னைக் கண்டித்த பெற்றோரை பயமுறுத்த, சக சிறுவர்களுடன் காட்டுக்குள் மாயமான பல்லடம் தொகுதி வேட்பாளரின் 15 வயது மகன் மீட்கப்பட்டுள்ளார். 

பல்லடம் அருகேயுள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் தினகரன். சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடத்தி வரும் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியின் சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடுகிறார். செவ்வாய்கிழமை காலை பிரச்சாரத்துக்குக் கிளம்பிய தினகரனை இருசக்கர வாகனத்தில் செக்போஸ்ட் வரை அழைத்துச் சென்றிருக்கிறார் 9ஆம் வகுப்புப் படிக்கும் அவரது மூத்த மகன். பின்னர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தினகரன் இரவு 10 மணிக்கு வந்து பார்த்தபோது, அதுவரை மகன் வீட்டுக்கு வராதது தெரியவந்துள்ளது.

உடனடியாக போலீசில் புகாரளிக்கப்பட்டு விசாரணை செய்ததில் ராயர்பாளையம் அபிராமி நகரைச் சேர்ந்த சிறுவர்கள் 10க்கும் மேற்பட்டோர் தங்கள் வீட்டில் இருந்து மளிகைப் பொருட்களுடன் அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றது தெரியவந்தது. காட்டுக்குள் சென்ற சிறுவர்கள் அங்கு பிரியாணி சமைத்து சாப்பிட்டதுடன் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.

அப்படி சென்ற சிறுவர்களில் தினகரனின் மகன் உட்பட 3 சிறுவர்கள் மட்டும் மீண்டும் வீடு திரும்பவில்லை. தீவிர தேடுதல் வேட்டையில் தினகரனின் மகன் மட்டும் காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டு விட, மற்ற இரண்டு சிறுவர்களைத் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். தினகரனின் மகனிடம் நடத்திய விசாரணையில், தங்களைப் பெற்றோர் கண்டித்ததால், அவர்களை பயமுறுத்தவே மற்ற சிறுவர்களை அனுப்பிவிட்டு காட்டுக்குள் ஒளிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். மாயமான 2 சிறுவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments